Monday, June 15, 2009

காவல் பூனைகள்

' 'பூஜ்ஜீ.. இக்கட ரா.. ரா.. ' ', புஸீ புஸீவென்று விஸ்தாரமாக பாதி சோபாவை ஆக்கிரமித்துக் கொண்டு இந்த அம்மாள் வாசலில் யாரை பார்த்து பூஜ்ஜீ என்கிறார் என்று பார்த்தேன்.
வாசல் கதவை ஒட்டினாற்போல் பூஜ்ஜீ என்கிற அந்த வெள்ளையும் வெளிர் நீலமும் கொண்ட பூனை, சோம்பல் முறித்த படி உடலை வில்லைப் போல வளைத்து ஜிலு ஜிலு என்று துடித்தது. எனக்கோ இருப்பு கொள்ளவில்லை.. எத்தனை முறை பிரச்சனையை ஆரம்பித்தாலும், அதிலிருந்து நழுவிக் கொண்டு வேறு ஏதோ பேசி திசை திருப்பிக் கொண்டிருந்தாள், இந்த அம்மாள்.. ச்சே.. சவிதாவை நினைத்தால் பாவமாக இருந்தது.... சரியான பாசிஸ்ட் மாமியார், மாமனார்தான் இவர்கள் இருவரும்..
' 'இங்கப் பாருங்க.. இங்கப் பாருங்க.. ' ', அந்த அம்மாள் கண்ணாடிச் சில்லுகளைப் போட்டு உடைப்பதைப் போல தன் கணவனைப் பார்த்துச் சிரித்தாள்.. அப்பா.. என்ன ஒரு சிரிப்பு.. எனக்கு என்னவோ , அவள் சிரிப்பை இப்படித்தான் உவமையாகக் கூறத் தோன்றுகிறது.. ' 'நேனு லோப்புல பிளுஸ்துந்தி காதா.. ' ', என்று தன் கணவனிடம் ஏதோ கூறினாள். நான் விழிப்பதைக் கண்ட பின்பு, ' 'இல்ல.. நா அத உள்ள கூப்புடறேன்ல.. அதுக்கு வர்ற புடிக்கல.. அதான் என்ன அப்படி அவசரம் உடனே என்னைய கூப்புடற.. கொஞ்சம் களிச்சுத்தான் வருவேன்னு சொல்லுது.. ' ', என்று கூறினாள்.. முகத்தில்தான் என்ன ஒரு பூரிப்பு..
அந்தப் பூனை உடலை வளைத்தால் அதற்கு இத்தனை அர்த்தமா.. இது என்ன மிருக பாஷையோ... புரியவில்லை.. ..எனக்கு இவர்கள் பேசும் தெலுங்கும் புரியவில்லை. என்ன பெயரோ பூஜ்ஜீ.... என்னைப் பொருத்தவரை எந்த மிருகத்திற்கும் பெயர் ராமு.. காரணம் தேவர் பிலிம்ஸ் படங்கள் பார்ப்பதால்..
' 'இந்தப் பூனயோட பெயர்தான் பூஜ்ஜா.. ' ', என்றேன் சிரித்துக் கொண்டே..
' 'என்ன அப்படிக் கேட்டுட்டிங்க.. என்ன புத்திசாலி தெரியுமா.. மனுஷாளக் காட்டிலும் ரொம்ப இன்டலிஜெண்ட்.. ' ', என்றார்.. முகத்தில் கோபம்.., ' 'நாங்க லண்டன் போயிருந்த போதுகூட இத விட்டுப் போக மனசில்லை.. இதையும் அளச்சிக்கிட்டுப் போவலாம்னு சொன்னேன்.. இவர்தான் வேண்டாம்னிட்டார்.. பாவம்.. ரெண்டு மாசம் இதப் பார்க்காம எனக்கு அளுகையே வந்துருச்சு.. நாங்க இதுகளுக்கு ஒளுங்கா சாப்பாடு கொடுத்துப் பாத்துக்கிட ஒரு பேமிலிய ஆயிரம் ரூவா சம்பளம் கொடுத்து எங்க வூட்ல தங்க வச்சுட்டுத்தான் ஊருக்கே போனோம்.. இதுங்க அத்தன உயிரா கெடக்குங்க.. ' ', என்று சொன்ன அந்த அம்மாளை விநோதமாகப் பார்த்தேன்.. நான் இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பார்களா என்று வித்தியாசமாகப் பார்த்தது, அந்த அம்மாளுக்கு சற்று எரிச்சல் ஏற்பட்டிருக்கும்.. மீண்டும் தன் புஜ்ஜீவுடன் பேசத் தொடங்கினாள்.. ' 'கிட்டி எங்கடா.. எங்கப் போச்சு சொல்லு.. ' ', என்றாள், அந்தப் பூனையிடம் கேட்டாள்.
' 'கிட்டியா.. அப்பிடின்னா கிருஷ்ணமூர்த்தியா.. ' ',
' 'இல்ல.. கிருஷ்ணவேணி.. அய்யய்யோ.. ஏங்க சீக்கிரம் வாங்க.. கிட்டி கம்பி வேலியில மாட்டிகினா போலருக்கு.. ' ', என்று படபடத்தாள் அந்த அம்மாள்.. இந்தக் கிழவியால் எழுந்து நடக்கவே முடியவில்லை.. இருந்தாலும் என்னமாய் ஆர்ப்பாட்டம் செய்கிறாள் என்று நினைத்தேன்.. நான் உடனே எழுந்து வெளியே வந்தேன். அவள் கணவரும் அவசரமாக பின் தொடர்ந்தார்..
' 'சேச்சே.. கம்பியில மாட்டிகில.. அங்க ஒரு பூச்சி ஓடுது.. அதப் பாத்து கத்துது.. ' ', என்று அதை மெதுவாய்த் தூக்கி உள்ளே எடுத்து வந்தேன்.. என் பின்னால் கிழவியின் கணவர் மூச்சிரைக்க வந்தார்..
' 'ஏங்க.. அவரு அளச்சிட்டு வருவாரு.. நீங்க ஏன் மாடிப்படியில எறங்கி வர்றிங்க.. ஏற்கனவே பி.பீ.. ' ', என்றாள் கிழவி..
' 'சார்.. நீங்க போங்க.. நா எடுத்துட்டு வர்றேன்.. ' ', கிட்டி சற்று ஈரமாக இருந்தது..
ஓருவழியாக கிட்டியையும் பூஜ்ஜீயையும் ஒர் அறையில் விட்டுக் கதவைச் சாத்தினாள்... உள்ளே இரண்டும் கீச் கீச்சென்று ஒரே சத்தம்..
நான் மெதுவாக இந்தப் பூனைகளிடம் ஆரம்பித்தேன்..
' 'அம்மா.. சவிதா எங்க வீட்டல வளர்ந்த பொண்ணு.. அஞ்சு வயலேர்ந்து பாத்துட்டு வர்றேன்.. என் மகள் மாதிரிதான் நாங்க நெனக்கிறோம்.. அதனாலத்தான்.. அவர் அப்பாவுக்கு பதிலா நா வந்து உங்ககிட்ட பேசறேன்.. ' ' என்று தொடங்கினேன்.
' 'சார்.. நானும் ஒரு மரியாதைக்குத்தான் நானும் ஒங்ககிட்டப் பேசறேன்.. அவளப் பத்தி பரிஞ்சு பேச இங்க வர வேண்டாம்.. என்ன தெரியும் உங்களுக்கு.. அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் மரியாத மட்டு இருக்கா.. மாமியார் மாமனார்ங்கற மரியாத வேண்டா.. ஒங்களுக்கு இப்படியொரு மருமவ செஞ்சா சும்மா இருப்பிங்களா... ' ', கிழவியின் முகம் என்னமாய்ச் சிவக்கிறது..
( ' 'மாமா.. .. ஒரே பொய் சொல்வாங்க.. நம்பாதிங்க.. தொட்டத்துக்கெல்லாம் குத்தம்னா நா என்னதான் செய்யறதுன்னு கேட்டா.. என்ன மரியாத கொறச்சலா பேசறன்னு சொல்றாங்க..)
' '.. இவரக் கேட்டுப் பாருங்க.. இவர் வயசு என்ன அவ வயசு என்ன.. இவர்கிட்ட எடக்கா பேசறா.. ' ', என்றார் தன் கணவனைக் காட்டி..
சோடாபுட்டிக் கண்ணாடி போட்டுக் கொண்டு தலையாட்டிய அவரைப் பார்ப்பதற்கும் பூனை மூஞ்சியைப் போல இருந்தது.. சன்னமாக ஏதோ சொன்னார்.. ஒன்றும் புரியவில்லை.. ' 'பாத்திங்களா.. ' ', என்றார் அந்த அம்மாள் என்னப் பார்த்து.. என்னத்தைப் பார்ப்பது..
( ' '.. எங்க மாமனார் எதப் பத்தியும் கவலப் படமாட்டார்.. அவரு பாட்டுக்குப் போயிட்டு இருப்பார்.. ஆனா, மாமியார் காக்காய் நிறம் சிவப்புன்னாலும் உடனே ஆமாம் என்பார்.. ' ')
' 'சரி.. எங்கள விடுங்க.. எம் பையன் இப்போ லண்டன் ஓடிப் போயிட்டான்.. இவ சங்காத்தமே வேணாம்னு.. அதுக்கு என்னச் சொல்றிங்க.. ' ',
( ' 'மாமா.. அவரு ஒண்ணும் எங்கிட்டக் கோச்சிக்கிட்டு லண்டன் போவல.. இவங்கதான் அனாவசியமா நாலு லட்ச ரூபா செலவு பண்ணி அனுப்பிட்டாங்க.. அவரே போன்ல சொன்னார்.. ' ',)
' 'இவள திரும்பியே பாக்க மாட்டேன்னு சொல்லிட்டான்... ' ',
( ' '.. வாரம் ஒரு தடவையாவது எங்கிட்ட பேசிட்டுத்தான் இருக்காரு.. ' ',)
' 'சரிம்மா.. இதெல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படின்னுதான் நடக்குது.. அதப் பெருசாக்க வேண்டாமே.. ' ', என்றேன்..
' 'என்ன சார் பேசறிங்க.. நீங்க மூணாவது மனஷாள்னு பேசாம இருக்கேன்.. இவ நேத்து வந்தவ.. ஏதோ இவ பெத்து வளர்த்துப் படிக்க வச்சதப் போல நடந்துகிறா ..நாங்க எம் புள்ள படிப்புக்கு எத்தன செலவு பண்ணோம் தெரியுமா.. ? யு.எஸ் போறதுக்கு.. இன்ஜினியரிங் படிப்புன்னு எங்க சொத்தயே கரச்சோம்... அம்பது லட்ச ரூவா சொத்து பாதியா ஆயிடுச்சு..தெரியுமா.. ? ' ',
( ' 'ஆமா மாமா.. அதுக்குப் பதிலாதான் எங்கப்பாகிட்டேர்ந்து முடிஞ்ச வரைக்கும் கறந்தாச்சே.. எங்கப்பா பாதிக்கு மேலேயே இழந்துட்டாங்களே.. அத சொல்ல மாட்டேங்கறாங்க.. ' ',)
' 'இப்போ முடிவா என்ன சொல்றிங்கம்மா.. ' ',
' 'முடிவு என்ன முடிவு.. எங்க புள்ள என் பேச்சத்தான் கேப்பான்.. இந்தப் பொண்ண டைவர்ஸ் பண்ணச் சொல்லிட்டோம்.. நாங்க அவனுக்கு வேற கலியாணம் பண்ணலாம்னு இருக்கோம்.. ' ',
நான் எத்தனையோ முறை மன்றாடியும் அந்த அம்மாள் தான் சொல்வதையே சொல்லிக் கொண்டு வந்தாள்.. பேசிப் பயனில்லை என்று விடைபெற்று வந்தேன்..
நான் வீடு திரும்புவதற்குள்ளாகவே, என்னைத் தேடி சவிதாவும் அவர் தந்தையும் என் வீட்டில் எனக்காகக் காத்திருந்தார்கள்.. பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது.. இவர்களிடம் என்ன சொல்வது.. சவிதாவின் முகத்தைப் பார்த்தேன்.. சே.. இவன் இன்னமும் குழந்தைதான்.. அவளிடன் உன்னை விலக்கிவிட்டு வேறு ஒரு திருமண ஏற்பாட்டிற்கு அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள் என்று சொல்லத் தோன்றவில்லை..
' 'என்ன ஆச்சு சார்.. என்னதான் சொல்றாங்க.. ' ', சவிதாவின் தந்தை.. இந்தச் சில மாதங்களில் அவர் மிகவும் ஒடுங்கிப் போனதைப் போல இருந்தது..
சவிதா இறுக்கமாக அமர்ந்திருந்தாள்..
' 'ம்ம்.. பாக்கலாம்.. இன்னமும் கொஞ்சம் பேசித்தான் பாக்கணும்.. சவிதா.. என்னம்மா.. ரொம்ப டல்லாயிருக்கே.. ' ', என்றேன்.
' 'ம்.. சொல்லுங்க அங்கிள்.. ' ',
' 'இதப் பாரும்மா.. நீ மனந்தளரக்கூடாது.. எனக்கு நம்பிக்கை இருக்கு.. உன் புருசன் அப்பப்ப பேசறதா சொல்ற.. தொடர்ந்து பேசிப் பாரு.. அவர் மனசு மாறுவார்னுதான் எனக்குத் தோணுது.. முழு நம்பிக்கையோட இரு.. ' ',
சவிதாவின் தந்தை பெருமூச்செறிந்தார்.. ' 'எல்லாம்.. விதியோட விளையாட்டுன்னு நெனச்சிக்கிறேன்.. வேற என்ன பண்றது.. அவங்க அந்தப் பூனைகளுக்கு தர்ற மரியாதகூட, மனுஷங்களுக்குத் தர்றதில்லை... பேசாம அந்தப் பூனைகளாப் பொறந்திருக்கலாம்.. ' ', என்றார் விரக்தியாக சிரித்துக் கொண்டே..
' 'நீங்க வேற.. அவங்க அப்படி ஒண்ணும் மிருகாபிமானி இல்ல.. அந்தப் பூனைகளுக்குப் பேசும் திறன் இல்லை.. ஒரு வேள அதுங்க பேச ஆரம்பிச்சா, அந்த அம்மாள் விரட்டிவிட்ருவாங்க.. ' ', என்றேன் ..

தீர்வு சொல்லுங்கள்....please

இதைப் பற்றி சொல்வதற்கே எனக்கு அவமானமாக இருக்கிறது.. யாரைப் பார்த்தாலும் என்னைக் கேலிப் பொருளாய்ப் பார்ப்பதைப் போல ஓர் உணர்வு.... ''பாபு சார்..'' உங்களில் யாராவது என்னை அழைத்தாலும் இந்த விஷயம் தெரிந்துதான் - இதைப் பற்றி விசாரிக்கக் கூப்பிடுகிறீர்களோ என்று தோன்றுகிறது.. இந்தச் சங்கதி தெரிந்த உலகம் என்னையே சந்தேகக் கண்கள் கொண்டு பார்க்குமோ என்று தோன்றுகிறது.. புழுவைப் போலத் துடிப்பது என்பது புத்தகத்தில் படித்திருக்கிறேன்.. ஆனால் அனுபவிக்கும் போதுதான் புரிகிறது.. ''எப்படியாப் பட்ட குடும்பம் இது.. கண் பட்டது போல ஆயிருச்சு..'' வீட்டுக் கிழவி அரற்றும் போது நொந்து போகத் தோன்றும்..

''உங்களாள பிரச்சனயா.. உங்க அண்ணனாலத் தான.. விடுங்களேன்..'' , என்ற என் மனைவியை முறைத்தேன், ''ஆமா.. இதப் பத்தி நினச்சி ஒங்களுக்கு உடம்புக்கு வந்தா நாதான அல்லாடணும்..'',

'' நீ கொஞ்சம் சும்மா இருக்கியா..'', கத்தினேன்.

''ஏன் எம் மேல எரிஞ்சு விளுகிறிங்க.. எங்கப்பாகூட சொல்லுவார்.. பொம்பள சமாச்சாரமே ஏடாகூடம்தான்னு..'',

''யேய்.. உங்கப்பாகிட்ட சொல்லித் தொலச்சுட்டியா.. கஷ்டகாலம்..'',

''சே.. எனக்கு ரொம்ப அவசியம்.. அதான் ஊரே நாறிப் போச்சே... ஆனா அவரு அரசல் புரசலாக கேள்விப் பட்டா, நா என்ன பண்றது.. ம்ம்.. என்ன பண்ணித் தொலயறது.. பெரியவருக்கு புத்தி இப்படிப் போயிருக்க வேணாம்.. விடுங்க.. சும்மா விசனப் பட்டுக் கிட்டே இருக்காதிங்க..''

அதெப்படி என் அண்ணன் தான் என்று விட முடியும்.. எப்படி இந்தச் செயலை செய்யத் துணிந்தான்.. வெளியே தலை காட்ட முடியாதபடி செய்து விட்டானே.. என் குடும்பம், அவன் குடும்பம் என்று இருக்கும் போது.. பாவம் அண்ணியாரை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது.. . பொறுமை, அதிர்ந்து பேசாத குணம் கொண்ட பெண்களில் முதன்மையானவர் என் அண்ணி.. குடும்பக் குத்து விளக்கு .. என் தாயைப் போலத்தான் அவரை நான் பாவிக்கிறேன்.. என் தங்கைகளைக் காட்டிலும் என் மனைவியைக் காட்டிலும் நல்லவர்.. ஒரு வேளை இந்தக் காலத்தில் அப்படி இருப்பதே ஒரு தவறு போலும்.. ஒரு வேளை அண்ணியார் இப்படிப் பட்டவர் என்பதால் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று முடிவெடுத்து விட்டானோ என் அண்ணன்..

எதைப் பற்றியும் கவலைப் படாத இவன், என்ன ஜென்மமோ.. நேரில் பார்த்து நறுக்கென்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.. அண்ணான இருந்தால் என்ன... தாத்தாவாக இருந்தால் என்ன.. எப்படி வளர்ந்தோம் இருவரும்.. நம் தாய் தந்தை எப்படி வளர்த்தார்கள்.. எத்தனை ஒழுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள்.. எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டுவிட்டானே.. அண்ணியாரைப் பற்றி கூட வேண்டாம்.. தன் கல்லூரியில் படிக்கும் மகள் பற்றிக் கூடவா கவலையில்லை.. இன்னமும் இரண்டொரு வருடங்களில் திருமணம் என்ற பேச்சு வந்து கொண்டிருக்கும் போது இப்படி நாறடித்து விட்டானே..


எனக்கும் அவனுக்கும் வயது வித்தியாசம் ஒரு வருடம் தான் இருக்கும்.. அதனால் அண்ணன் என்பதைக் காட்டிலும் இருவரும் நண்பர்கள் போலத்தான் பழகி வந்தோம்.. நானாவது சற்று தைரியசாலி என்று எங்கள் வீட்டில் பெயர் எடுத்திருக்கிறேன்.. அவன் சற்று பயந்தவன்தான்.. ஆனால் எப்படி இந்த விஷயத்தில் இப்படி நடந்து கொண்டான் என்பது தெரியவில்லை..

சரி.. அவன்தான் ஆண்.. ஆனால் ஒரு பெண் இத்தனை மோசமாகவும், எதற்கும் துணிந்தவளாகவா இருப்பாள்..? அடேயப்பா.. நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.. எப்படி இவளிடம் விழுந்தான்.. எதை நம்பி இப்படி ஒரு கேவலமான உறவை ஏற்படுத்திக் கொண்டான் என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை.. எப்படியோ நடந்து விட்டது. அவள் ஒரு டைவர்சி.. ஏதோ அலுவல நிமித்தம் பார்த்திருக்கிறான். எப்படியோ பழக்கம் ஆகிவிட்டது. தனியாக ஒரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பது பின்னர் தெரியவந்தது.. அவ்வப்பொழுது அவளுடன் வெளியூர் சென்றும் வந்திருக்கிறான்.. ஓரு முறை கோவை சென்ற போது, எனது அண்ணியாரின் உறவினர் ஒருவர் லாட்ஜில் இருவரையும் பார்த்து விட்டு தகவல் தந்திருக்கிறார்.. பிறகு விஷயம் அம்பலத்திற்கு வந்திருக்கிறது.. பிறகு அவளுடனாக தொடர்பை குறைத்துக் கொள்ள, அதன் பொருட்டு அந்தப் பெண்ணுக்கும் இவனுக்கும் சிறிது சிறிதாக மனஸ்தாபம் வந்திருக்கிறது.. அளவுக்கு மீறவே, அந்தப் பெண் இவன் மீது, திருமண ஆசைக் காட்டி ஏமாற்றி விட்டான் என்று போலீசில் புகார் கொடுத்து விட்டாள்.. இன்றோ, விஷயம் விபரீதமாகவும் இழுபறியாகவும் சென்றுவிட்டது.


அன்று அண்ணியாரை வீட்டில் பார்க்கச் சென்றோம்.. பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தார்.. அவருக்கு என்ன நடந்தது என்பதைக் கூட புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாமல், ஏதோ சித்த பிரமை பிடித்ததைப் போல இருந்தார்.. அண்ணன் தலைமறைவாகப் போய் விட்டான். போலீசு வேறு அடிக்கடி வீட்டிற்கு வந்து கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது.. ஏதோ பத்திரிகையில் வேறு போட்டிருந்தார்களாம்.. பெண்ணை ஏமாற்றிய அதிகாரி தலைமறைவு என்று.. இன்னமும் அவமானப் பட என்ன பாக்கியிருக்கிறது என்று தோன்றியது..

வீட்டில் அண்ணியாரும், அவள் மகள் மட்டும் தனியாக போலீசுடன் போராட முடியவில்லை என்று கேள்விப் பட்டோம்... மகள் அழுது கொண்டேயிருந்தாள்.. எங்களைப் பார்த்ததும் மேலும் தேம்ப ஆரம்பித்து விட்டாள்..

'' அம்மா.. குழந்த மாதிரி.. பொறுமையா இரு.. உனக்கு படிப்பு வேலன்னு நெறய இருக்கு.. கலா.. வா இங்க.. பாரு கொஞ்சம் தேத்து.. '', மனைவியை அழைத்தேன்..

'' வா.. சாப்பிட்டியா..'', மனைவி அவள் தலையை வருடிக் கொடுத்தாள்..

'' சித்தப்பா.. போலீசுல மறுபடியும் போன் பண்ணாங்க.. அப்பா வந்தா உடனே இன்ஸ்பெக்டர வந்து பாக்கணும்னு சொன்னார்.. எதுக்கும் நீங்க போய்ப் பாத்துட்டு வர்றீங்களா.. அந்த பிசி பேசறது ரொம்ப மோசமா இருக்கு.. '',

எனக்கு அந்த க்ஷணத்தில் நாக்கைப் பிடிங்கிக் கொண்டு சாகலாம் போல இருந்தது.. சேச்சே.. இவன் செய்கையால் பலரையும் நோகச் செய்த இவனை சுட்டுக் கொன்றால் என்னவென்று தோன்றியது.. நடுவில் இந்த போலீசு வேறு ‘கட்ட’ பஞ்சாயத்து செய்வதைப் போலத் தோன்றியது..

நான் வந்த விஷயத்தை சொன்னதுமே, காவல் நிலையத்தில் மரியாதையே வேறு மாதிரி தேய்ந்து வந்தது.. '', யாருப்பா.. ஒங்கண்ணனா அவன்.. மரியாதையா நாளைக்க வரச் சொல்லு.. இல்ல அவன் பொண்டாட்டியயும் உன்னையும் உள்ள கொண்டு வச்சுருவேன்.. ஏதோ போனா போவுதுன்னு மரியாத கொடுக்கேன்.. அத காவுந்து பண்ணிக்கறது ஒங்கிட்டயும் ஒங்கண்ணன் கிட்டயும் இருக்கு.. என்ன புரியுதா..'',

வந்த ஆத்திரத்தையும் அழுகையையும் அடக்கிக் கொண்டேன்.. என்ன செய்வது என்று திகைத்து நின்றேன்.. நான்கு பக்கமும் அடைத்துக் கொண்டதைப் போல ஓர் உணர்வு.. அண்ணன் எங்கு போனான் என்பதே புரியாத புதிராக இருந்தது.. யார் வீட்டுக்கு தகவல் வந்தாலும் உடனே தெரிவிக்கும் படி வேண்டினேன். இப்போது அவன் வந்தால்தான் பிரச்சனை ஒரளவாவது தீரும்..

எங்கள் பிரச்சனையை தெரிந்த ஒருவர் ஒரு பிரபலமான வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றார்.. உண்மையில் உடுக்கை இழந்தவன் கைபோல் என்ற குறளுக்கே முழு அர்த்தத்தை அன்றுதான் புரிந்து கொண்டேன். கிட்டத்தட்ட உடைந்த குரலில் அனைத்தையும் சொன்னேன். '' சார்.. அவனுக்கு என்ன நேர்ந்தாலும் கவலயில்லை.. முதலில் அண்ணி அவர் மகள் ரெண்டு பேருக்கும் மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் தொந்தரவும் வரக்கூடாது.. அதான் எங்களுக்கு இப்போ முக்கியம்.. ரெண்டு பேரும் லேடீஸ்.. என்ன பண்ணுவாங்க.. '',

அதன் பின்னர் விஷயங்கள் மள மள வென்று நடந்தேறியது.. காவல் துறையில அவருக்கு இருந்த செல்வாக்கைப் பயன் படுத்தி, ஒரு சமரசத் திட்டத்தை ஏற்படுத்தினார்.

அன்று அந்தப் பெண் அழைக்கப்பட்டாள்.. முதலில் வர மறுத்தவள், பிறகு சம்மதித்தாள்.. அவள் வரும் நாள் அன்று என் மனைவியும் தானும் வருவேன் என்று அடம் பிடித்தாள்.. சரியென்று ஒரு பட்டாளமே கிளம்பி அந்த வழக்கறிஞர் அலுவலகத்திற்குச் சென்றோம்.. அந்தப் பெண் தன்னுடன் ஒரு நபரை அழைத்து வந்தாள்.. யாரோ மாமாவாம்.. அவள் முகத்திலும் சற்று கலவரக் குழப்ப ரேகை..
' இவர்கள் ஏதாவது செய்து விடுவார்களா.. ' என்ற பயம் போலும் என்று நினைத்தேன். இந்தப் பக்கத்தில் நாங்கள்.. எதிர் பெஞ்சில் அந்தப் பெண்ணும், அவளுடன் வந்த நபரும்.. நடுநாயகமாக, வழக்கறிஞர்..

தொண்டையை செருமிக் கொண்டு வழக்கறிஞர் தொடங்கினார், '' இதோ பாரும்மா.. அவர் ஒரு சம்சாரி.. இது உங்களுக்குத் தெரியும்.. தெரிஞ்சே பழகியிருக்கிங்க.. அவர் தன் குடும்பத்தை விட்டுவிட்டு வருவார் என்று நீங்க நெனைச்சேன்னு சொல்றது ஏற்க முடியல.. அப்படியே வாதத்திற்கு ஏற்றாலும், உங்களப் போல இரண்டு பெண்கள்தான பாதிக்கப் படுவார்கள்னு ஏன் நீங்க நெனக்கல.. அப்போ.. இதுல மோடீவ் வேற மாதிரி அதாவது அவருடைய வளத்திற்காகன்னு சொல்லத் தோணுது.. '',

''சாரி சார்.. நீங்க மட்டும் இல்லை.. எல்லாரும் சாவனிஸ்ட்தான்.. '', அந்தப் பெண் விடுவதைப் போல இல்லை..

''மேடம்.. டோண்ட் ரஷ் டு எனி கன்க்ளுஷன்.. எல்லா இஸ்டும் பேசலாம்... ஆனால் அத வசதிக்கு ஏற்றபடி பயன் படுத்தக் கூடாது.. '', என்றார்.

நீண்ட காரசார விவாததிற்குப் பின்னர், அந்தப் பெண்ணுக்கு நஷ்ட ஈடாக ஒரு தொகை அளிக்க ஏற்றுக் கொண்டதன் பேரில் , தான் போலீசில் அளித்த புகாரை திரும்பப் பெற சம்மதித்தாள்..

விட்டால் போதும் என்று என் அண்ணியார் அந்தத் தொகைக்கு ஏற்றுக் கொண்டாரோ என்று நினைத்தேன்.. வெகு நாட்களுக்குப் பின்னர் அவர் முகத்தில் சற்று நிம்மதி தெரிந்தாற் போல இருந்தது.. இத்தனை நடந்தும் என் அண்ணன், கதை நாயகன் இன்று வரை தலையே காட்ட வில்லை..

வரும் வழியில் என் மனைவி காதோரம் கூறினாள், '' ஏங்க.. இந்தப் பொண்ணப் பாத்திங்களா.. அழகுன்னுகூட சொல்ல முடியல.. அப்படியொன்னும் அண்ணியக் காட்டிலும் கலர் இல்லை.. முடி கூட பாருங்க ஏதோ எலி வால் மாதிரி தொங்குது.. இதுகிட்டப் போய் ஒங்கண்ண ஏன் மயங்குனாரு..'', என்றாள்..

''அட ராமா.... கொஞ்சம் சும்மா இரு.... நீ இதுக்குத்தான் வருவேன்னு அடம் புடிச்சியா..'', என்றேன்.. இந்த சமாச்சாரத்தில் எனக்கு ஒரு விஷயம் புரிகிறது. அவரவர் தனக்குத் தோன்றியதைப் போல ஒரு பிரச்சனையைப் பார்ப்பார்களோ என்பதுதான் அது..
----------------------------------------
நன்றி வடக்கு வாசல் இலக்கிய மலர் செப் 2008

Saturday, November 1, 2008

ஒத்தை

ஒத்தை... பெரும் மள வர்ற மாதிரியும் இருக்கு, வராத மாதிரியும் இருக்கு.. இப்படியே போக்குக் காட்டிக்கிட்டு இருக்கு.. மொகச் சவரம் பண்ண கடைக்குப் போவணும்.. போவ முடியுமா.. முடியாதான்னு தெரியல.. நாளைக்கி செவ்வாகிளம.. முடியாது.. இன்னிக்கிப் போனாத்தான் உண்டு.. இப்பெல்லாம் சாயங்காலம் போவ முடியறதுல்ல.. போன மாசத்திலேர்ந்து பேத்திய பள்ளிக் கூடத்திலேர்ந்து கூட்டிக்கிட்டு வர்ற வேல வந்துருச்சி.. ஆட்டோக்காரன். அம்பது ரூவா ஏத்திட்டான்.. மருமவ ஆட்டோவ நிறுத்திட்டா.. ' 'ஒங்கப்பா போவட்டுமே.. சும்மா இருந்தா அவருக்கு போரடிக்காதா.. ' ', ன்னு பையன்கிட்டப் பேசிட்டு இருந்தா.. ' 'ஏதுக்குடி.. அம்பது ரூவாய அளுதுடுவோம்.. வயசான காலத்தில அவர ஏன் போவச் சொல்லணும்.. ' ',ன்னு கேட்டான்.. இது அவங்களுக்குள்ள ஒரு பிரச்சனையா ஆக வேண்டாம்னுதான், ' 'சரிடா.. நானே போறேன் ' ',ன்னு சொன்னேன்.. என்ன கெட்டுப் போவுது.. எம் பேத்திதான.. நாதான செய்யணும்.. வேற யார நம்பறதுன்னு சமாதானம் சொல்லிக்கறேன்.. அன்னிக்கி மத்தியானம் கொஞ்ச அசந்தாப்ல இருந்திச்சு.. தூங்கிட்டேன்.. அலாரஞ்சனியன் வேற வேல செய்யல.. திடுக்குன்னு முளிப்பு தட்டி எளுந்து பாத்தா, மணி நாலு.. மூணரைக்கே பள்ளிக் கூடம் விட்ருவாங்க.. அரக்கப் பரக்க எளுந்து ஓடினேன்.. பேத்தி ஒண்டியா வெளியே நிக்குமே.. அன்னிக்கி பேத்தி ஒரே திட்டு.. ' 'என்ன தாத்தா.. எல்லாரும் என்னய என்னய பாக்கறாங்க.. அசிங்கமாக இருக்கு.. எங்க போயி தொலஞ்ச.. ' ',ன்னுது..அழுக.. நா என்னத்தப் பண்ண.. ? வெரசாத்தான் வந்தேன்.. எளுபத்திஎட்டு வயசுக் கிளவன் ஓடி வர முடியுமா.. ? ரோடுங்க வேற குண்டுங்குளியுமா.. சொன்னா எம் பேச்ச கேக்கவேயில்ல.. சமாதானம் பண்ணி அளச்சிட்டு வந்தேன்.. வெள்ளைக்காரங்க காலத்திலேர்ந்து எது மாறிச்சோ என்னவோ.. இந்த ரோடுங்க மாறவேயில்ல.. ஆனா மனுசங்க மாறித்தான் போயிட்டாங்க.. இப்ப எதப் பத்தியும் யாருக்கும் கவலயே இல்ல.. காந்தி நேரு எல்லாரும் ஏதோ இவங்க பக்கத்து வீட்டுக் காரங்க மாதிரி ஆயிப் போச்சு.. நாங்க கடவுளாப் பாத்தா மனுசங்க இப்ப கடச் சரக்கா போயிட்டாங்க.. மருமவ உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில கெடந்தாளே, அப்ப நாதான் சோறு கொண்டு போவேன்.. அங்க ஒக்காந்திருந்த போது, ஒரு பையன் என்னய கேட்டான், ' 'தாத்தா.. ஒங்க பழய நாட்களப் பத்திச் சொல்லுங்க.. கேப்போம் ' ',ன்னான்.. இவன் பொழுது போறதுக்கு வேணும்னா எங்கதய கேப்பான்.. ஆனா எனக்கு அப்படியா.. ? எத்தன பிரச்சனங்க.. எத்தன மனுசங்க.. எத்தன இழப்புங்க... பெருமூச்சு விட்டுட்டே இருக்க வேண்டியிருக்கு.. நா, சேது, ராமச்சந்திரன் மூணு பேரும் மாசத்துக்கு ஒரு மொற எங்கையாச்சும் கூடிப் பேசுவோம்.. பழய நெனப்புங்கள பேசுவோம்.. நேரம் போவறதே தெரியாது.. நாலு மாசம் முன்னாடி, ராமச்சந்திரன் செத்துப் போயிட்டான்.. போன மாசம், சேது, பையனுக்கு வேற ஊர் மாத்தல் ஆயிருச்சுன்னு போயிட்டான்.. பொண்டாட்டிப் போய்ச் சேர்ந்தப்பறம் ரொம்பவே வெறிச்சுன்னு ஆயிருச்சு.. ஏதோ எப்பவோ இந்த மூணு சிநேகிதங்களோட பேசிட்டு இருந்தேன்.. அதுலயும் மண்ணு விளுந்திருச்சு.. போய் மூலையில மொடங்கின மாதிரி ஆயிட்டேன்.. என்னத்தையோ அச போட்டுட்டு ரூம்புல மொடங்கிப் போயிட்டேன்.. என்னென்னவோ நெனப்பு வந்து வாட்டும்.. எங்கய்யா, ஆத்தா நெனப்பு வந்தா ஆளப் போட்டுக் கொன்னு எடுக்கும்.. எப்பேர்பட்ட மனுசங்க அவங்க.. எங்கய்யா சொல்லிட்டே இருந்தாரு, ' ' எலேய்.. வெவரமா இரு.. வெவசாயத்தப் பாரு ' ',ன்னு சொல்லுவாரு.. நா, பட்டணத்துக்குப் போவேன்னு அடம் புடிச்சுட்டு இருப்பேன்..ஆத்தாதான் செல்லம் கொடுக்கும்.. ' 'புள்ளய அவ இஸ்டத்துக்கு விடுங்க..ஒரே புள்ள.. ' ',ன்னு சொல்லும்.. பட்டணத்துக்கு வந்துட்டேன்.. எம் மொத வேல, ஒரு வக்கீலுகிட்ட, குமாஸ்தாவா.. வக்கீலய்யா, பெரிய நாமம் போட்டுக்கிட்டு இருப்பாரு.. செக்கசெவேல்ன்னு, வளர்த்தியா..ரொம்ப கண்டிப்பானவரு.. அவரு ஆபீசுல இருக்காரா இல்லையான்னு கேக்கவே வேணாம்.. இருந்தா, ரூம்புல பெரும் சத்தம் போட்டுக்கிட்டு இருப்பாரு.. இங்கலீசு தண்ணி பட்ட பாடு.. எங்கூட சின்னசாமின்னு ஒரு பய வேல பாத்துக்கிட்டு இருந்தான்.. இப்போ இருக்கானா செத்துட்டானான்னு தெரியல.. அவன் திடார்னு வேற வேலக்கித் தாவினான்.. எங்கிட்ட மட்டும்தான் சொன்னான்.. ' 'எலேய்.. நீயும் வேற வேலைக்கிப் போயிரு.. ரொம்ப நாளு இங்க குப்ப கொட்ட முடியாது ' ',ன்னான். அவன் சொல்லாம கொள்ளாம வேலைய விட்டு நின்னுட்டாதால, ரொம்பவே கடுப்பாயிட்டாரு, வக்கீலய்யா.. டைப்ரைட்டிங் மிசின ஒளிச்சு வச்சுட்டு, போலீசுல பிராது குடுத்தாட்டாரு.. வெலவெலத்துப் போனேன்.. கொஞ்ச நாளுக்குப்பறம் எனக்கு போஸ்டாபீசுல தற்காலிகமா வேல கெடச்சுது..வக்கீலய்யா ஏத்துக் கிடுவாரோ மாட்டாரோன்னு பயந்து போனேன்.. மெதுவாப் போய்ச் சொன்னேன்.. என் நல்ல நேரம்.. பிரச்சனயில்லாம அனுப்பிட்டாரு.. அந்தக் காலத்தில போஸ்டாபீசு உத்யோகம் தற்காலிகமா கெடச்சாலும், ஏதோ கவர்னர் பதவி மாதிரி அப்ப இருந்துச்சு.. இப்ப, எல்லாருக்கும் வெளிநாட்டு வேலைக்கித்தான் அலையுறாங்க.. அப்படி ஒரு வெளிநாட்டு மோகம் வாட்டியெடுக்குது.. எம் பையன் சிநேகிதங்க பல பேரு வெளிநாட்டுல இருக்கறதால, இவனுக்கும் இருக்கற வேலைய வுட்டுப் போட்டு வெளிநாட்டுக்குப் போவப் போறானாம்.. மருமவளும் ஒத்து ஊதறா.. எங்கப் போயி முடியப் போவுதோ.. ? என்னய என்னப் பண்ணப் போறாங்கன்னு தெரியல.. ஏதாச்சும் ஆஸ்ரமத்தில வுடுவாங்கப் போல இருக்கு.. எம் பேச்சு எங்க எடுபடப் போவுது..கேட்டா எடக்கா பதில் வரும்.. ம்ம்.. ஒத்தப் புள்ளையா இருந்தா இதான் கதி.. அண்ணனோ தங்கச்சியோ இருந்தா அவங்க வூட்லப் போயி விளுந்துறலாம்.. அது என்னமோ தெரியல..எங்க வம்சத்திலேயே எல்லாரும் ஒத்த மரங்கதான்.. நானு. எங்கய்யா, ஆத்தா அவ வூட்ல ஒரே பொண்ணாம்.. அதைப் போல எம் மவன் எனக்கு ஒத்ததான்.. எம் பேத்தி.. எல்லாரும் ஒத்தையாத்தான் பொறந்துருக்கோம்.. ரெண்டு நாளா ஏதோ மவனும் மருமவளும் கசமுசான்னு பேசிட்டு இருக்காங்க.. ஏதோ பிரச்சன போல இருக்கு.. என்னவாம்.. ? எங்கிட்டச் சொல்ல மாட்டாங்க..எங்கிட்ட எதச் சொன்னாங்க.. இருந்தாலும் எம் மனசு கெடந்து அடிச்சிட்டு இருக்கு.. வேலையில ஏதாச்சும் பிரச்சனயா.. இல்ல இந்தப் பாவி வேலையே கீலையே வூட்டுட்டு வந்துட்டானா.. ? நா கெடந்து தவிக்கிறேன்.. இவங்க என்னய ஒரு பொருட்டா மதிக்கவே இல்லை.. ஒரு வளியா தெரிஞ்சுகிட்டேன்..நல்ல விசயம்தான்.. சந்தோசமான விசயம்..மருமவ முளுகாம இருக்கு.. இதுக்குப் போயா ரெண்டு பேரும் குடி முளுகிப் போனது மாதிரி இருக்காங்க.. அட என்ன உலகமடா இது.. மவன் பெரிய குண்டத் தூக்கிப் போட்டான்.. கருவ கலைக்கப் போறானாம்.. அடுத்து பொண்ணா பொறந்தா என்ன பண்றதாம்.. கட்டுப்படி ஆவாதாம்.. அடப் பாவிங்களா.. கொடுமை..இந்தக் காலத்தில வாழ்க்கையே வரவு செலவு கணக்கு போல ஆயிருச்சே..ரெண்டாவது பொண்ணு பொறந்தா எத்தன செலவு ஆகும்னு அது வளர்ந்து படிச்சு, கலியாணம் கட்டிக் கொடுக்கறவரைக்கும் ஆவுற செலவ கூட்டிச் சொல்றான் ,மவன்.. இப்ப எல்லாம் வியாபாரப் பொருளா ஆயிறுச்சே.. ? என்னால பொறுக்கவேமுடியல.. கண்ணெதிரெ நடக்கற விசயத்தை வேடிக்கைப் பாத்துட்டு இருக்க வேண்டியதா போச்சு.. நா இதுக்கு அனுமதிக்கறதா.. ? மொத மொறய அவங்க ரெண்டு பேருக்கும் மத்தியில போய்ப் பேசினேன்.. ' 'சுப்பு.. என்னப்பா இதெல்லாம்.. பொறக்கப் போற பச்ச மண்ணக் கொல்றதா.. நியாயமாடா.. நீ ஏன் இப்படி இருக்கே.. நா ஒன்னய வளர்த்த விதம் சரியில்லயா.. ? உடம்புல வலு இருக்கற வரைககும் எனக்கு ஒண்ணும் புரியல..இப்போ ஒண்டிக்கட்டையா ஆனதுக்கப்பறம் ரொம்பவே கொடுமையா இருக்குடா.. ஒரே வெறுமையா இருக்குடா..தனியா அல்லாடற மாதிரி இருக்குடா.. தற்கொலை பண்ணிக்கலாம்னு வேற தோணுது.. ஒரு பேச்சுத் துணை இல்ல.. எனக்கு ஒரு அக்காளோ, தங்கச்சியோ, அண்ணனோ எவனோ இருந்தா ஒரு ஆறுதலுக்கு வயசான காலத்தில போயி பேசிட்டு பளய நெனவுகளை அச போடலாம்.. நாதான் அதுக்குக் குடுத்து வைக்கல.. ஒனக்கும் வயசானா அதே கதிதான்.. இதெல்லாம் ஒனக்கு வயசானப்பறம் புரியும்.. ஆனா எம் பேத்திக்காவது அந்தக் கொடுமையான நெலமை வரவேணாம்டா.. பையனோ, பொண்ணோ ஒருத்தருக்கு ஒருத்தர் வயசான காலத்தில ஆறுதலா ஒரு பேச்சுத் துணைக்கு இருப்பாங்கல்ல.. யோசித்துப் பாருடா.. ' ', என்னய மீறி குரலு கம்முது.. பையன் அதிர்ச்சி ஆயிட்டாப்பல தெரியுது.., ' 'அப்பா.. என்னப்பா பெரிய வார்த்த பேசறிங்க.. ' ', ன்னு சொல்லிட்டு என்னய கைதாங்கலா நாற்காலியில ஒக்கார்த்தி வச்சான்.. (2000)

வர்க்க பயம்

வர்க்க பயம்
நான் அன்று அலுவலகத்தில் 'டெய்லி சேல்ஸ் பிகர் ' சரியாகாமல் தவித்துக் கொண்டிருந்த போது, எனக்கு போன் வந்திருப்பதாக ராகவன் கூறினான்.
' 'டேய் பார்த்தா.. உனக்குத்தான்.. உன் மச்சான் ரகு பேசறான்.. ' ', என்று ரிசீவரைக் என்னிடம் கொடுத்தான்.
' 'ஹலோ .. யாரு அத்திம்பேரா.. நா ரகு பேசறேன்.. கொஞ்சம் அவசரமா ஆத்துக்கு வர்றேளா.. இங்க பெருங்களத்தூர்ல.. ' ', என்றான்.
எனக்குச் சட்டென்று புரியவில்லை.. இவன் எங்கே என் வீட்டுக்கு வந்திருக்கிறான்.. என்னை வேறு உடனே வரச் சொல்கிறான்..
' 'ஏன்டா.. யாருக்கு என்ன ஆச்சு.. ஏதாவது உடம்பு கிடம்பு.. ' ',
' 'அத்திம்பேர்.. இன்னிக்கி பத்து மணிக்கு ஆத்துக்குப் போலீஸ் வந்தாளாம்.. அக்காவ
கேட்டுண்டு வந்தாளாம்..ஸ்டேசனுக்கு வரச் சொன்னாளாம்.. ' ',
திடுக்கிட்டேன்..
' 'யார.. மைதிலியா.. நன்னா கேட்டியா.. ஏதோ தப்பிதமா இருக்கப் போறது.. ' ',எனக்கு ஜீவ்வென்று வந்தது..
' 'இல்ல அத்திம்பேர்.. நம்மாத்துக்கு வந்துதான் கேட்டா.. கரக்ட்டா சொன்னா.. ஏம்மா இங்க சர்க்குலேஷன் லைப்ரரி நடத்தற பொண்ணு வீடு இதானனு சரியா கேட்டாளாம்..அந்தப் போலீஸ்காரர் ஏதோ சீட்டு ஒண்ணு கொடுத்துட்டுப் போனார்.. அதில 'ஆய்வாளரை மாலையோ மதியமோ வந்து பார்க்கவும் 'ன்னு எழுதியிருக்கு.. ' ', என்றான் மூச்சுவிடாமல்..
எனக்கு மயக்கமே வந்தது.. ஓரே பரபரப்பாகயிருந்தது.. போலீஸ்..! அதுவும் என் மனைவியைத் தேடி.. சிரிப்பாகவும் இருந்தது.. அவள் என்ன ரெளடியா.. அல்லது ஏதாவது அரசியல் தொண்டனா.. அவளைத் தேடி.. நம்பவே முடியவில்லை.. ஏதோ கடுமையான குழப்பம் நேர்ந்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் என் மனைவியைத் தேடி..
ஒரு அப்பாவியைத் தேடி, உலகமே தெரியாதவளைத் தேடி.. சேச்சே..
அலுவலகத்தில் என் மாமனாருக்கு உடம்பு சரியில்லை என்று ஒரு பொய்யைக் கூறிவிட்டு (ஜாக்கிரதையாக), பர்மிஷன் கேட்டு வீட்டிற்கு விரைந்தேன்.
என்ன பிரச்சனையோ.. சரியாகத் தெரியவில்லை.. என் மனைவியிடம் ஒரு குணம் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் முதலில் தன் தம்பியிடம் கூறிவிடுவாள்..அவன் எதோ ஜார்ஜ் புஷ் என்ற நினைப்பு.. இப்போதும் அப்படியே அவனை முதலில் வரவழைத்துவிட்டாள்.
தாம்பரத்தில் இறங்கி என் சைக்கிளை எடுத்துக் கொண்டு அசுர மிதி மிதித்தேன்.. தடதடவென்று பரதநாட்டியம் குச்சிப்புடி ஆடியது நானா என் சைக்கிளா என்று தெரியவில்லை..
ரகு போன் செய்யும் போது கூறியதை நினைவுப் படுத்திப் பார்த்தேன்.. வீட்டுக்கு வந்த போலீஸ்காரர் 'சர்குலேஷன் லைப்ரரி ' நடத்தற பொண்ணு வீடு என்று என் வீட்டைக் கேட்டிருக்கிறார் என்றால், மைதிலி சர்குலேஷன் புக்ஸ் போடப் போனபோது எதாவது தவறு செய்து விட்டாளா.. ஏதாவது விபத்து கிபத்து என்று..ஒரு வேளை நீயூசென்ஸ் கேசு என்பார்களே.. சேச்சே.. என்ன எழவு இது.. யோசிக்கவே முடியவில்லை..
என் தாய் எத்தனையோ முறைகள் குறை சொல்லியும், நானும் என் மனைவியும் எங்கள் குடும்ப பட்ஜெட்டை உத்தேசித்து (தங்கச் சீட்டு கட்ட வேண்டும்) எங்கள் பகுதியில் ஒரு
சுழற்சிப் படிப்பகத்தை நடத்தி வருகிறோம்.. அவள் சைக்கிள் நன்றாக விடுவாள்.. கொலம்பஸ் ரேஞ்சில் அதை நான்தான் கண்டுபிடித்து இந்தத் தொழிலில் ஊக்கு வித்தேன்..
காலையில் சமையல் செய்து விட்டு புத்தகம் போடக் கிளம்பினாள் என்றால், ஒரு மூன்று அல்லது நான்கு மணிநேரம் ஏரியாவை ஒரு சுற்று சுற்றிவிட்டு மதியம் 1 மணி சுமாருக்கு
வீடு திரும்புவாள்.. தற்சமயம் கிட்டத்தட்ட ஒரு அறுபது வீடுகளில் சுழற்சி செய்கிறாள். அவ்விடம் சென்ற போது என்ன ஆயிற்றோ.. ஆண்டவா..
வீட்டு வாசலில் ரகு நின்று கொண்டிருந்தான்.. அவன் ஏதோ சொல்ல வந்ததைக் கூட சட்டை செய்யாமல் விருட்டென்று உள்ளே நுழைந்தேன். என் தாய் ஒரு மூலையிலும் என் மனைவி ஒரு மூலையிலும் தரையில் அமர்ந்திருந்தனர். என் மனைவி தன் இரு கன்னங்களில் கையை வைத்துக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அனைவரும் மெளனமாக இருந்தனர்.
' 'என்ன ஆச்சு.. ' ', என்றேன் பொறுமையிழந்து..
' ' என்ன ஆறத்துக்கு.. நா தலப்பாடா அடிச்சிண்டேன்.. என்ன பெரிய பிசினஸ் பண்றேள் கொள்ளப் போறது.. இப்போ ஆத்து வாசல்ல போலீஸ் நிக்கறான்.. ' ', என்றார் என் தாய்.
' 'ரகு நீயாவது சொல்லு.. ' ',
' 'அதான் அத்திம்பேர்.. காத்தால பத்து மணிக்கு ஒரு ஆட்டோல ஒரு போலீஸ்காரர் வந்தார்.. சர்க்குலேஷன் நடத்தற பொண்ணு வீடு இதானான்னு கேட்டார்.. ஆமான்னு அம்மா சொன்னாளாம்.. உடனே எஸ்.ஐ அய்யா வரச்சொன்னார்ன்னு இந்தச் சீட்டக்
கொடுத்தாராம்.. ஏதோ கேஸ் இருக்காம்.. ' ',
நான் முடிவெடுத்தேன்.. இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை.. பேசாமல் ஒரு வக்கீலைப் பார்த்து யோசனை கேட்பதுதான் சரி என்று தோன்றியது. தேவையற்ற பிரச்சனையை என் குடும்பத்தினரே கிளப்பிவிடுவார்கள்.. என்ன கேஸ் எதற்கு வரவேண்டும் என்று அந்தப் போலீஸிடம் கேட்க பயந்து அவர் சொன்னதற்குத் தலையாட்டும் கூட்டத்தினரிடம் போய் என்ன விவாதிப்பது..
எங்கள் பகுதியில் வக்கீல் ராமராவ் எனக்குப் பழக்கம். அவரும் எங்கள் சர்க்குலேஷன் உறுப்பினர்.. அவரிடம் சென்றேன்..
' ',இதப் பாருங்க பார்த்த சாரதி, இது அனாவசிய மிடில் கிளாஸ் பயம்.. எஸ்ஐ இன்னிக்கிகா வரச்சொன்னார்.. போக வேண்டாம்.. சாயங்காலமா, நீங்க மட்டும் ஒங்க ஒய்ப் வேண்டாம்.. போய்ப் பார்த்துட்டு என்ன விஷயம்னு கேளுங்க.. ரொம்ப ஏடாகூடமா இருந்தா, நா வர்றேன்.. அப்பறம் மூவ் பண்ணலாம்.. ' ', என்றார்.
அவர் சொன்னதைப் போல செய்வது என்று முடிவுவெடுத்து, அந்தக் காவல் நிலையத்தை அன்று மாலை அடைந்தேன்..
நான் அந்தக் காவல் நிலையத்திற்குச் சென்ற போது அங்கு ஒருவரும் இல்லை.. வெறிச்சென்று இருந்தது.. ஒரு மூலையில் மேஜை நாற்காலிகள் போடப் பட்டிருந்தது.. மேலே ஒரு மின் விசிறி (ஹைதர் காலத்து) அனாமத்தாகச் சுற்றிக் கொண்டிருந்தது.. நான் உள்ளே சென்று பார்த்தேன்.. பெஞ்சில் ஒரு காவலர் மேல் சட்டையை கழற்றி விட்டு தன் தொந்திக்கு மின் விசிறிக் காற்று வருவதற்கு தோதாகப் படுத்துக் கொண்டிருந்தார்.. என்னைப் பார்த்ததும் மெதுவாக எழுந்து கொண்டார்..
' 'யாரு..என்ன மேட்டருங்க.. ' ', என்றார் கொட்டாவிவிட்டுக் கொண்டே...
முதன் முதலில் காவல் நிலையம் செல்கிறேன்.. அப்பப்பா.. இதுவரையில் திரைப்படத்தில் பார்த்துத்தான் பழக்கம்.. என் மனைவியில் தயவில் நானே செல்ல வேண்டியிருக்கிறது.. ஆண்டவா.. என்ன ஒரு படபடப்பு இதுவரை நான் அனுபவித்தே இருக்காத ஒரு பயங்கலந்த மயக்கம்.. நான் சின்ன வயதில் செய்த சின்னஞ்சிறு தவறுகள் நினைவுக்கு வந்தது.. ஓரத்தில் துப்பாக்கி.. அடி வயிற்றில் பந்தாக சுழல்வதைப் போலிருந்தது..
ஒரு வழியாக பயம் நீங்க அனுமாரை தியானம் செய்து கொண்டு ' 'எஸ்ஐய பாக்கணும்.. ' ', என்றேன்..
' 'அய்யா அஞ்சு மணிக்கு வருவாரு.. அப்படி ஒக்காருங்க.. டா வாங்கி வரச் சொல்றேன் .. ' ', என்றார்.. பரவாயில்லை.. தன்மையாக பேசுகிறாரே..
ஒரு வேளை இவருக்கு 'நம் கேசை 'ப் பற்றித் தெரிந்ததால், மரியாதை தருகிறாரா..
அப்போது ஒன்றும் பிரச்சனையில்லை போலிருக்கிறதே என்று நினைத்த என் நினைப்பு பத்து நிமிடம்கூட நீடிக்க வில்லை.. இந்த மனிதருக்கு ஒரு எழுவும் தெரியவில்லை என்பது அவர் பேச்சின் ஊடே தெரிந்தது.. அடச்சே எனக்கு சுவாரஸ்யமே குறைந்து விட்டது.. இந்த மனிதரோ என்னை ஒரு மணிநேரம் 'ரம்பம் ' போட்டுக் கொண்டிருந்தார்.. எந்த போலீஸ் தண்ணி போடுவார்.. எவர் போடமாட்டார் என்பது எனக்கு முக்கியமா.. உலகத்திலயே தண்ணி போடாத போலீஸ் இவர்தானாம்.. பெருமையாகச் சொல்லிக் கொண்டார்..
ஐந்து மணிக்கு மேல் அந்த ஆய்வாளர் ஜீப்பில் வந்தார்.. நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்.. நாங்கள் அங்கே இருப்பதைச் சட்டை செய்யாமலே அவர் பாட்டுக்கு உள்ளே சென்றார்..
அந்தக் காவலர் என்னை ஆய்வாளரிடம் அறிமுகப் படுத்த, எஸ்ஐ அலட்சியமாக என்னைப்
பார்த்தார். அவர் பார்வை ஒன்றே போதும், நான் தெருவில் கிடக்கும் ஒரு ஜந்து -
அதைக் காலால்கூடத் தொட முடியாது என்ற பாவனை.. ஒரு வேளை இதுவும் அவர்கள்
ட்ரைனிங்கில் கற்றுக் கொடுப்பார்கள் போலும் என்று நினைத்தேன்.
' 'என்ன கேசு.. ' ', என்றார் ஆயாசத்துடன்.
' 'சார் நா திருமலைநகரிலிருந்து வர்றேன்.. காலையில ஒரு பி.சி வந்து என் மனைவிய ஸ்டேசனுக்கு வரச் சொன்னதா சொன்னாரு.. ' ', என்று இழுத்தேன்.
' 'ஓ.. அந்த லைப்ரரி கேசா.. எங்க அந்தப் பொண்ணு.. ' ',
' 'அவள அழச்சிண்டு வரல.. நா வந்துருக்கேன்..என்ன கேசுன்னு சொன்னா..கேட்டுண்டு
போகலாம்னு.. நா அவ ஹஸ்பெண்டுதான்.. ' ',
' 'நீ வந்து என்ன பண்ண.. அந்தப் பொண்ண அளச்சிட்டு வாங்க..என்கொயரிக்கு.. ' ',
' 'என்ன கேசுன்னு சொன்னா.. ' ',
' 'யோவ் என்ன கேசுன்னு சொன்னாத்தான் கூட்டிட்டு வருவியா.. சொல்ல முடியாதுய்யா.. தொலச்சுருவேன்.. யார்ட்ட பேசிட்டு இருக்க.. நாளைக்கி காலையில அந்தப் பொண்ணு இங்க நிக்கணும்.. அப்படியில்லைன்னா ரெண்டு பேத்தையும் சஸ்பெக்ட்டுன்னு உள்ள போட்ருவேன்.. ' ', உருமினார்.
நான் உறைந்து போனேன்.. இதென்ன விபரீதம்.. இத்தனை கடுமையாக என் வாழ்க்கையில் அன்று மட்டுமே அனுபவித்திருக்கிறேன்.. தலை சுற்றி 'கிர் 'ரென்று விழுந்துவிடுவேன் போலிருந்தது.. சற்று சுதாரித்துக் கொண்டு அவரிடம் மேலும் பேசுவதற்குள், ஜீப்பில் எங்கோ மறைந்துவிட்டார்..
யாரோ அழைத்தார்கள்.. அந்தக் காவலர்தான்.. ' 'சார்..காலையில ஒங்க வூட்டுக்கு
வந்தது முனசாமி அண்ணன்தான்.. ' ', என்று இன்னொரு காவலரைக் காட்டினார்.. நான்
அவரை அணுகினேன்.
' 'ஆமாங்க.. நான்தான் வந்தேன்.. யாரு அந்தப் பொண்ணு.. ஒங்க ஒய்பா.. அது வேற ஒண்ணையும் இல்லை சார்.. சதாசிவம் தெருவில ஒரு மர்டர் அட்டெம்ட் நடந்திருக்கு.. ' ', என்று தொடங்கினார்.
திடுக்கிட்டேன்.. நான் அவரை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்குச் சென்றேன்..
அவர் கூறியதைக் கேட்டு பயம் இரட்டிப்பாகியது..
சதாசிவம் தெருவில் ஒரு வயதான தம்பதியினர் வசிக்கின்றனர். அவரும் எங்கள் சுழற்சிப் படிப்பக உறுப்பினர். இரண்டு நாட்களுக்கு முன்பு யாரோ காலையில் அந்த வீட்டுக் காரரை நன்றாக நையப் புடைத்துச் சென்றுவிட்டார்களாம்.. குற்றுயிராக அந்த மனிதர் இப்போது மருத்துவமனையில்.. நினைவு திரும்பவில்லை.. வீட்டுக்காரரின் மனைவி எங்கோ ஊருக்குச் சென்று இருக்கிறாராம்.. அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது..
போலீஸ் விசாரணையில் எதிர் வரிசை டாக்கடைக்காரர், தான் காலையில் யாரையும் பார்க்கவில்லை என்றும், காலை 9 மணி அளவில் அந்த வீட்டிற்குப் புத்தகம் போடும் ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும் கூறவே, போலீசில் என் மனைவியை வரச் சொல்லியிருக்கிறார்கள். அனைத்தையும் கூறிவிட்டு அந்தப் போலீஸ்காரர் ஒரு அம்பது
கேட்டார்.. கையில் இருந்ததைக் கொடுத்தேன்.. எனக்கு உடம்பில் ஸ்மரணையே இல்லை..
அட கடவுளே.. இது என்ன கொடுமை.. அடுத்து என்ன ஆகுமோ.. இதுவரை எவரும் பிடி
படவில்லை என்றால் என் மனைவியைக் கைது செய்துவிடுவார்களோ.. அய்யோ.. என்னால்
நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.. அவள் இதைக் கேட்டாலே, பிராணனை விட்டுவிடுவாளே.. ஆண்டவா.. கைவிட்டுவிடாதே..
உடனே ராமராவ் வீட்டிற்கு விரைந்தேன். என் கஷ்டகாலம் அவர் ஊருக்குப் போய் இருக்கிறாராம்.. வர இரண்டு நாட்கள் ஆகுமாம்.. செத்தேன் என்ற நினைத்துக் கொண்டேன்.. இனி யார் எனக்கு உதவப் போகிறார்கள்.. ஆனாது ஆகட்டும்.. என்ன நடக்க வேண்டுமோ நடந்து தொலையட்டும்.. என் கையை மீறி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.. என்ன செய்ய முடியும்.. அழுகை பீறிட்டு வந்தது.. அடக்கிக் கொண்டேன். யாராவது ரோட்டில் பார்த்தால் சிரிப்பார்கள்.. அரஸ்ட் ஆகிவிடுவாளோ.. ஒருவேளை அந்த எஸ்ஐ கைது வாரண்ட் வாங்கத்தான் சென்றிருக்கிறாரோ.. தீடிரென்று இந்தக் கேசில் திருப்புமுனையாக மைதிலியைக் கைது செய்ய கோர்ட்டார் உத்தரவு வந்துவிடுமோ.. எப்படி வரும்.. அய்யோ.. என்னால் எதையும் நினைக்க முடியவில்லையே..
வீட்டில் அனைவரும் சூழ்ந்து கொண்டு கேள்விமேல் கேள்வி கேட்டார்கள்.. என் தாய் தங்கை, மனைவி என்ன கேட்கிறார்கள் என்பதே புரியவில்லை.. என் பேயறைந்த முகத்தைப் பார்த்து மாமனார் கேட்டார், ' ' என்ன சொல்றார் இன்ஸ்பெக்டர்.. ' ', என்றார் முகத்தில் ஆயிரம் டன் விசனம்..
' 'அம்மா.. விஷயம் விபரீதமா போய்டுத்தும்மா.. ' ', என்று மட்டும்தான் சொன்னேன்.
ஒரு வழியாக ஆசுவாசப் படுத்திக் கொண்டு அனைத்தையும் சொல்லி முடித்தேன்.. மைதிலி அந்தச் செட்டியார் வீட்டுக்குச் சென்றது.. அதை ஒரு டாக்கடைக்காரன் பார்த்தது.. அதை அவன் போலீசில் தெரிவித்தது என்று தொடர்ந்த அந்த பயங்கரத்தை முடித்தேன்..
' 'அய்யோ.. நா அவாத்துக்கு புக்ஸ் போடப் போனது நிஜம்.. ஆனா காலிங் பெல்
அடிச்சும் யாரும் வரல.. அதனால திரும்பிட்டேன்.. உள்ளயே போகலயே.. ' ', என்றாள் கண்களில் பயத்துடன்..
' 'அய்யய்யோ.. மன்னி நீங்க அந்தக் கேட்டத் தொட்டேளா.. அதில ஒங்க கைரேகை
பதிஞ்சு இருக்கும்.. ' ', என்று என் தங்கை போதாத குறைக்கு அவள் பங்கிற்குச் சொல்லி வைக்க, அனைவரையும் ஒருவித பீதி கவ்வியது..
அதன் விளைவாக, பொத்தென்று ஒரு சத்தம் கேட்டது.. என் மனைவிதான் மயங்கி விழுந்தாள்..
நான் அந்த மருத்துவமனையில் அவளைச் சேர்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது..
அதற்குள் என்னென்னவோ நடந்து விட்டது.. குற்றுயிராகக் கிடந்த அந்தச் செட்டியார் பிழைத்துவிட்டார்.. அவரே நடந்ததைக் கூறினாராம்..
அவர் சொந்தக் காரர் பையன்கள் அவர்கள் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனராம்..
ஏதோ சொத்து விஷயமாக காரசாரமாக விவாதம் நடந்து வந்ததாம்.. இரவு முழுவதும்
பேசியும் எந்த உடன்பாடு எட்டப்படாததால் உச்சகட்டமாக வாய்த் தகராறு முற்றி இவரை அடித்துப் போட்டு, நகைகளை எடுத்துச் சென்றுவிட்டனராம்.. இவற்றை என்னிடம் கூறிவிட்டு அந்தக் காலவர் என்னிடத்தில் ஒரு 'ஸ்டேட்மெண்ட் ' வாங்கிக் கொண்டு சென்றார்.
அன்று என் மனைவி கண் விழித்த போது நடந்தவற்றைக் கூறி அவளைத் தேற்றினேன்.
' 'போறும் மைதிலி.. இனிமே இந்தப் பிசினஸே நமக்கு வேண்டாம்.. நிறுத்திடலாம்.. தலைக்கு வந்தது தலப் பாகையோட போச்சும்பாளே.. அதப் போல.. ' ', என்றேன்.
அதற்கு என் மனைவி அந்த நிலையிலும் ஈனஸ்வரத்தில், ' ' என்னத்து நிறுத்தணும்.. ஏதாவது ஒரு பையன வச்சுண்டு போடுவோம்.. மாட்டிண்டா அந்தப் பையன்தான மாட்டிப்பன்.. ' ', என்றாள் மிகச் சாதாரணமாக..
(1997)

முருகன் & சிம்ரன்

முருகனும் சிம்ரனும்..
முருகனின் வாழ்க்கையில் சிம்ரன் பெருமளவிற்கு விளையாடிவிட்டாள் என்றால் யாரால்தான் நம்ப முடியும்.. ? இதோ இந்த இந்தி மொழி பேசும் மாநிலத்தில் குடியேறக் காரணமானதிலிருந்து, தாபாவை மேலாண்மை செய்வதுவரை வந்ததற்கு சிம்ரன்தான் காரணம்.. ரூர்க்கி நகரைத் தொடர்ந்து உத்ராஞ்சலை நோக்கி நீளும் பிரதான சாலையில் வீரப்பன் வனாந்திரமாக பரந்து விரியும் பாதையில், அவன் மாலிக் ராம் அவ்தார் சிங்கின் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாகி இந்த 'ரன் தாபா '-வை (இங்கும் சிம்-ரன்னா.. ?) லீசுக்கு விட, அவன் மாலிக் தேர்ந்தெடுத்தது கூட தன்னிடம் வேலை பார்த்த உபி காரனையோ பீகாரியையோ இல்லை.. இந்த மதுரைத் தமிழனைத்தான்.. (வெற்றி மதுரைத் தமிழனுக்கே..)...
சூருட்டுப் பிடித்துக் கொண்டு, தூங்கி வழியும் கண்களுடன் ' 'ராம் ராம் சாப் ' ' என்று இவனைப் பார்த்து காரை படிந்த சிவப்பேறிய பற்களுடன் சிரிக்கும் மஸ்தூர்கள் சைக்கள்களில் வரும் சப்ராசிகளுக்காக 'ரொட்டி தால் ' செய்து கொடுக்கும் அளவிற்கு
வந்ததும்.. சிம்ரனால்தான்...
'எங்கள் வாழ்க்கையில்தான் சில வருடங்களில் எத்தனை மாற்றம், விரும்பியோ விரும்பாமலோ.. நான் மானாமதுரையிலிருந்து சென்னை வந்து உ.பி யில் கரைந்து விட்டேன்.. முத்துப் பாண்டியை சென்னையில் தொலைத்துவிட்டேன்.. சிம்ரனுக்குத் திருமணமாகிவிட்டது.. '
' 'எலேய் சிம்ரனுக்கு கல்யாணம் ஆவப் போவுதாம்.... இல்லன்னா ஒன்னையத்தான் கட்டியிருக்கும்.. ' ', என அப்போதெல்லாம் கூறி கெக்கே என்று சிரிப்பான், முத்துப் பாண்டி.. இப்போது முத்துப் பாண்டி என்ன செய்து கொண்டிருக்கிறானோ.. ? எங்கிருக்கின்றானோ.. ? போலீசு அடித்ததில் முத்துப் பாண்டி, முத்துநொண்டி ஆகியிருப்பான்.. 'அம்போ என்று தமிழ்நாட்டில் அவனை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.. அந்தப் பாவம் என்னைச் சும்மா விடாது.. ' அன்று மானாமதுரையிலிருந்து சென்னைக்கு ஓடிவந்த போது அவனுக்கு அடைக்கலம் கொடுத்தவன்தான் முத்துப்பாண்டி.. தூத்துக்குடிக்காரன்.. ' 'நம்ம வூர் பய நீ.. பயப்படாத.. ' ', என்று ஆறுதல் தந்தவன்.. எப்படி ஒரு செல்வந்தன் இன்னொரு செல்வந்தனை அடையாளம் கண்டுகொண்டு நட்பு பாராட்ட ஆரம்பிக்கிறானோ, அதைப் போல ஓர் அனாதை-அன்றாடங்காய்ச்சி இன்னொரு அனாதை-அன்றாடங்காய்ச்சியை இனம் கண்டு கொண்டு விடுகிறான்.. அப்படித்தான் முத்துப் பாண்டி முருகனை அரவணைத்தது..
முத்துப் பாண்டி, சாமான்கள் ஏற்றும் மூன்று சக்கர வண்டி வைத்திருந்தான்.. ' 'நம்ம சிநேகிதப் பயலோடதுதான்.. ' ', என்ற அவனை பின்னால் ஏற்றிக் கொண்டு, ' 'இந்த ஏக்கம் கொள்ளாமல் எந்த நாடும் இன்றில்லை.. ' ', என்று பாடிக் கொண்டு சந்தோசமாக இருப்பான்..
சென்னை அடையாரில் சாந்திலால் மார்க்கெட்டிங் டிஸ்டிரிப்யூட்டர் அலுவலகத்தில் விதவிதமாக அட்டைப் பெட்டிகள் வந்திறங்கும்.. சாந்திலால், ' ' டொய்.. நாளக்கு காத்து அடிச்சிகிணு வந்துரு.. நெறய ஸ்டாக் போவணும்.. ' ', என்று இந்தி கலந்த தமிழில் கூறுவான்.. முத்துப் பாண்டி சலியாத உழைப்பாளி.. மாங்கு மாங்கு என்று எத்தனை பெட்டிகளை பின்னால் வைத்தாலும், சிரித்த முகத்தோடு சைக்கிளை மிதிப்பான்.. பின்னால் முருகன் சைக்கிளைத் தள்ளி விடுவான்.. ஆனால், பாண்டியோ, ' 'எலேய்.. நீயும் ஏறிக்கோ.. ' ', என்று சிரிப்பான்.. ' 'வேணாம் நண்பா.. எப்டி மிதிப்பே.. ' ', என்று கேட்டால், ' ' அட.. நீ.. உட்காரு முருகா.. இதெல்லாம் ஒரு வெயிட்டா.. ஜீஜீபீ.. ' ', என்று மறுபடியும் சிரித்து, ' 'இந்த ஏக்கம் கொள்ளாமல், எந்த நாடும் இன்றில்லை.. ' ',
' 'அது என்ன பாட்டு.. பாண்டி.. ' ',
' 'வாத்தியார் பாட்டு.. பளசு.. ' ', என்று மீண்டும் முப்பத்தியிரண்டு பல்லையும் காட்டுவான்....
பாட்டாளி...
சில சமயம் அய்ம்பது நூறு கிடைக்கும்.. சில சமயம் சற்று அதற்கு மேல் கிடைக்கும்.. அப்போது முத்துப்பாண்டி ரொம்ப குதூகலமாகிவிடுவான்.. அன்று பீப் பிரியாணி வெட்டிவிட்டு, சரக்கு ஏற்றிக் கொண்டு, இரவுக் காட்சி.. ஏதோ ஒரு தமிழ்ப் படம்.. பள பளவென்று பங்களா, நீச்சல் குளம், விதவிதமான வித்தியாசமான வண்ண உடைகளில் நாயக நாயகியர்கள் வலம் வருவதை வாயைத் திறந்து கொண்டு பார்ப்பான், முருகன்.. ' 'குட்டி என்ன ஷோக்கா இருக்கா.. ' ', என்று நினைத்துக் கொள்வான்.. ' 'யாரு.. பாண்டி இந்தப் பொண்ணு.. ' ',
' 'சிம்ரன்..புதுப் பொண்ணு.. ' ',
' 'அட.. நல்ல சிவத்த குட்டியா இருக்கு.. ஐயரு பொண்ணா.. ' ',
முத்துப் பாண்டி கொழம்பிப் போய், பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டுச் சொன்னான், ' 'இல்ல.. வடக்கத்திப் பொண்ணாம்.. ' ',
' 'அப்படின்னா.. ' ',
' 'அதான்டா.. டெல்லி பம்பாய்லேர்ந்து வந்துருக்கு.. ' ',
சிம்ரன் எத்தனை நல்ல பெண்.. என்னமாய்ப் படபடவென்று பேசுகிறாள்.. அழகாகச் சிரிக்கிறாள்.. எத்தனை அன்யோன்யமாகப் பழகுகிறாள்.. என்ன ஒரு தன்மை.. நியாயத்திற்காக பயங்கரமாக வாதாடுவாள் போலிக்கிறதே..
அன்றிலிருந்து, முருகனுக்கு சிம்ரன் மீது இனம் புரியாத உணர்வு ஏற்பட்டுவிட்டது.. எங்காவது போஸ்டரில் சிம்ரன் படம் இருந்தாலும், சிம்ரன் தன்னையே உற்றுப் பார்த்துச் சிரிப்பது போல உணர்வு அவனுக்கு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும்.. சிம்ரன் நடித்த படத்தை விடாமல் பார்க்க ஆரம்பித்தான்.. ஒரு நாளாவது அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை பெருகிக் கொண்டேயிருந்தது.. ' 'பாத்துருலாம் முருகா.. இந்த வூர்லதான் இருக்கு.. பாத்து கேட்ரலாமா.. எம்மா.. முருகன் ஒன் நெனப்பாவே இருக்கான்.. கட்டிக்கிற சம்மதமான்னு.. ' ', என்று சிரிப்பான்.. முருகன் சற்று வெட்கப்பட்டான் ..
' 'அட ஆசயப் பாரு.. ' ', சிரித்தான் முத்துப் பாண்டி.. தன்னுடைய சிநேகிதனின் ஆசையை நிறைவேற்றவிட்டால், நான் என்ன மனிதன் என்று முத்துப் பாண்டி எண்ணியிருப்பானோ என்னவோ, ஒரு நாள் அவர்கள் வசிக்கும் குடிசைக்கு அருகே ஒரு வீட்டில், ஏதோ திரைப்பட ஷீட்டிங்காம்.. அதில் சிம்ரன் நடித்துக் கொண்டிருப்பதாக தகவல் அறிந்து கொண்டான்..
அட..
சாந்திலால் கடை அட்டைப் பெட்டிகள் வேறு சைக்களில் இருந்தது.. அதை அவசரஅவசரமாக தன்னுடைய குடிசை வீட்டில் வைத்துவிட்டு, இருவரும் சிம்ரன் தரிசனத்திற்குச் சென்றுவிட்டார்கள்..
இதோ சிம்ரன் அதோ சிம்ரன் என்று கால் கடுக்க நின்று கொண்டிருந்தவர்களை அடிக்கடி காவலாளி விரட்டியடித்துக் கொண்டிருந்தானே ஒழிய கண்குளிர அவளைப் பார்க்க விடவில்லை.... ஒரு வழியாக மாலைதான் ஏதோ கொஞ்சம் பார்க்க முடிந்தது.. பார்க்க விட்டால்தானே.. சே.. என்ன ஒரு கூட்டம்.. அய்.. அதோ சிம்ரன்.. அப்பப்பா.. இவள் வானிலிருந்து நிச்சயம் குதித்திருக்க வேண்டும்.. எத்தனையொர் அழகு.. என்ன ஒரு நிறம்.. அவளை லேசாகத் தொட்டு, அந்த விரலால் நம்மைத் தொட்டுக் கொண்டால், நாமும் இத்தனை சிவப்பாகிவிடுவோமா என்று தோன்றியது, முருகனுக்கு.. தன்னைக் காட்டிலும் அட்டைக் கரியாக இருக்கும் முத்துப் பாண்டிக்குத்தான் இவளின் நிறத்தை சற்று தரவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.. கூட்டம் முண்டியடித்தது.. காவலாளி அனைவரையும் வெளியே விரட்டியடித்தான்.. அதைப் பார்த்து சிம்ரன் ஒன்றுமே சொல்லாதது, முருகனுக்கு எரிச்சலான எரிச்சல் வந்தது.... ஒரு வழியாக வெளியே வந்த போது இருட்டியே விட்டது..
' 'எலேய்.. அட்டப் பொட்டிய அப்படியே விட்டுட்டோமே.. போய்க் குடுக்க வேணாம்.. ' ', என்றான் முருகன்..
' 'இனிமே போய்ப் பிரயோசனம் இல்ல.. நாளக்கிக் காலையில கொடுத்துறலாம்.. ஒண்ணும் பிரச்சனயில்ல ' ', என்று நடையைப் போட்டான், முத்துப் பாண்டி..
வீட்டிற்குச் சென்று பார்த்தால், அட்டைப் பெட்டிகள் சிலவற்றைக் காணவில்லை.. ஒரு பெட்டியை வேறு உடைத்துப் போட்டு உள்ளே இருப்பதை குடைந்து யாரோ அபேஸ் செய்திருந்தார்கள்.. அதிர்ந்து போய், பக்கத்தில் விசாரித்தால், வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்த அந்தக் கிழவி, யாரோ முத்துப் பாண்டிக்கு சிநேகிதன் என்று கூறிக் கொண்டு அவற்றை எடுத்துச் சென்றதாகச் சொன்னாள்.. எழவெடுத்த வீட்டிற்கு பூட்டாவது ஒழுங்காக இருக்கிறதா.. ? முதலில் இது ஒரு வீடா.. ? இதை நம்பி அந்தப் பெட்டிகளை வைக்கலாமா.. சே.. எத்தனை பெரிய முட்டாள்தனம் செய்து விட்டோம் என்று நொந்து கொண்டான், முருகன்..
சாந்திலால் முத்துப் பாண்டியின் கதைகளை நம்பத் தயாராக இல்லை, போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டான்... பாண்டி கைது செய்யப்பட்டான்.. தன்னையும் வேறு சந்தேகப் பட்டு கைது செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்ட முருகன், அன்று அவசர அவசரமாக திருட்டு ரயில் ஏறி டெல்லி வந்தவன்தான்.. நிச்சயமாக ஒரு நண்பனை நட்ட நடு ஆற்றில் விட்டு வரும் அளவிற்கு மோசமானவன் இல்லைதான்.. இருந்தாலும், போலீஸ் முத்துப்பாண்டியை லாக்கப்பில் ஜட்டியுடன் தலைகீழாகத் தொங்கப் போட்டு அடிப்பதாகத் தகவல் வந்தது.. டின் கட்டி அடித்து பாண்டியின் காலையே ஒடித்துவிட்டதாம் போலீசு.. இதைக் கேள்விப்பட்டு, அதிர்ந்து போய், அடிக்கு பயந்துதான் ஓடி வந்து விட்டான்..
'நண்பா.. மன்னித்துவிடு.. என்றாவது உன்னை வந்து பார்ப்பேன்.. ', அப்படி என்றாவது என்பதற்கே ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.. வர வேண்டும் என்று நினைத்தாலும், போலீசு வெறியுடன் அவனைத் தேடி அலைகிறதோ என்ற நினைவு அவன் ஆவலைத் தடுத்து நிறுத்திவிடும்.. முதலில் டெல்லி வந்து, அங்கு ஏதோ ஒரு தமிழர் ஓட்டலில் வேலை பார்த்து, அடுத்தடுத்து சில வருடங்களில் ராம் அவ்தார் சிங்குடன் இனம் புரியாத நட்பு ஏற்பட்டு, அவருடன் வெளியேறி, இதோ முடிவில் இந்த ரோட்டோர 'தாபா '... இப்போது மாலிக்கும் கடையை அவனிடம் கொடுத்துவிட்டு தன் சொந்தவூர் சென்று விட்டார்...,.. அவன் தமிழ்நாடு செல்லத் தருணம் பார்த்து வந்தான்.. இன்னமும் சில வருடங்கள் ஆகும் போலத் தோன்றியது.. அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.. சோகம் வாட்டியெடுத்தது.. இது என்ன பிடிப்பே இல்லாத வாழ்க்கை.. புரியாத வாழ்க்கை.. டிசம்பர், ஜனவரி மாத உ.பி குளிரைப் போல சுற்றிலும் வெண்மைப் பனியாக எதுவும் தெரியாத, புரியாத வாழ்க்கை.. சென்னையில் இப்போதைக்காட்டிலும் குறைவாக வருமானம் வந்தாலும், அதில் எத்தனை நிறைவும் சந்தோசமும் இருந்தது.. ஆனால் இங்கு.. ம்ம்..
ஊரிலிருந்து மாலிக், ஏதோ ஒரு குடும்பத்தை கடையில் வேலை செய்ய அனுப்பியிருந்தார்.. தாயும் மகளும் முருகன் முன்பாக வந்து நின்றார்கள்.. இரண்டு பெண்களும் ஒரு மூக்கில் மட்டும் வளையம் போட்டுக் கொண்டு, பூனைக் கண்களால் மிரட்சியுடன் முருகனைப் பார்த்தார்கள்.. இவள் மகளாவது பரவாயில்லை.. இந்தக் கிழவியிடம் என்ன வேலை வாங்க முடியும்.. காய்ந்த தென்னஞ்சருகு போல இருந்தாள், கிழவி..
' 'அரே சோக்ரீ.. க்யா நாம் துமாரா.. ' ', என்று வினவினான்..
' 'சிம்ரன்.. ' ', என்றது அந்தச் சின்னக் குட்டி..
உஷ்ணம் தலைக்கேறியது, முருகனுக்கு.. சற்றுத் திகைத்தவன், பின்னர் இந்தியில் தொடர்ந்தான்.. ' 'காலையில் கடை முழுவதும் சுத்தம் செய்வது, பாத்திரம் அலம்பி வைப்பது, மாவு பிசைவது, வந்தவர்களுக்கு ரொட்டி உடனே செய்வது.. ' ' என்று வெறி பிடித்தவன் போல வேலைகளை அடுக்கிக் கொண்ட சென்றான்..
(நன்றி வடக்கு வாசல் நவம்பர் 2005)

கரடி ROOM

கரடி ரூம்
பத்ரிநாத்

அகத்தியர்குளம் என்பதுதான் அகத்திகுளம் என்று மருவி இறுதியில் ஆத்திக்குளம் என்று மாறியிருக்க வேண்டும். இப்போது அங்குதான் குடும்பத்துடன் சென்றுகொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். நான் அங்கிருந்து புலம் பெயர்ந்து.. அதாவது நான் எட்டாம் வகுப்பு வரை அங்கு படித்தேன். ஒரு மனிதனின் வாழ்க்கையில் பதினான்கு வயதுவரை உள்ள பருவம் மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.. அந்த வயதுவரை மனதில் படரும் படிமங்கள் சம்பவங்கள் இயல்பாகவே மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. அதனால்தான் ஆத்திக்குளத்தின் மீது அலாதியான சினேக உணர்வு. பழைய நண்பனைப் பார்த்ததைப் போல.. வேலை நிமித்தம் சிங்கப்பூர், யூ.கே அமெரிக்கா என்று பல நாடுகள் நான் பார்த்திருக்கிறேன்.. ஆனால் இப்போது ஆத்திக்குளம் செல்லும்போது ஏன் இந்தக் குறுகுறுப்பு ஏற்படுகிறது.. ?
' 'ஓங்க ஊர் இது மாதிரி இருக்குமாப்பா.. ' ', என்று கேட்டான் என் ஐந்து வயது மகள், சுற்றிலும் வயல்கள் சூழ நடுநாயகமாகத் தெரியும் சில குடிசைகளைக் காட்டி..
' 'சேச்சே.. இது குக்கிராமம்..எங்கவூர் அதக் காட்டிலும் பெரிசு.. ' ',
' 'பெருங்களத்துீர் மாதிரி இருக்குமாப்பா.. ' ', துருதுருவென்று விழிகளை உருட்டியபடி..
' 'ம்ம்..இருக்கும்.. ' ',
மீண்டும் ஏதோ கேட்க எத்தனித்தான்.. மனைவி குறுக்கிட்டாள், ' 'சும்மா தொணதொணக்காத.. ' ', என்றவுடன் அவன் முகம் சுருங்கியது..
' 'சேச்சே.. நீ கேளுடா.. ' ', என்றேன்.
' 'நீ படிச்ச ஸ்கூலை எனக்குக் காமிப்பா.. ' ', கண்களில் மின்னும் அதே ஒளியுடன்..
' 'ஆமா.. அது பெரிய டூரிங் ஸ்பாட்டு.. ' ', என்றாள் அவள்..
' 'நீ வேணும்னா எங்கவூர் கோவிலுக்கு வேண்டுதல்னு வரலாம்.. நா வர்றதுக்குக்குக் காரணமே எங்க ஸ்கூல், பழைய ஃபிரண்ட்ஸ் இவங்களப் பாக்கத்தான்.. ' ',
' 'அப்படி யாரு பழைய நண்பர்கள் இருக்காங்க.. ' ',
' 'தெரியல.. ' ', என்று பெருமூச்செறிந்ிதேன்.. உண்மைதான்.. ஏதோ இரண்டொரு நண்பர்கள் இருக்கலாம்..பல நண்பர்கள் என்னைப் போலவே வேலைக்காகவே பல இடங்களுக்குப் பிரிந்து பறந்து சென்று விட்டோம்.. நகரமயமாதலுக்கு எங்கள் கிராமமும் ஒர் உதாரணம் .. என்னுடைய நண்பர்களில் ஆத்திக்குளத்தார் இரண்டாவது பையன் வாசு மிகமிக முக்கியமானவன்.. ஆத்திக்குளத்தார் என்று அழைக்கப்படும், ஆத்திக்குளம் சாம்பசிவம் எங்கள் பள்ளியின் ஆசிரியர் மற்றும் உதவிப் பொறுப்பாளர்.
தலைமையாசிரியர்- தாளாளர் எப்போதாவதுதான் எங்கள் பள்ளியில் இருப்பார்.. ஆத்திக்குளத்தார்தான் பள்ளியின் முழுப்பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.. ஆரம்பப் பள்ளிதான் என்றாலும் இப்போதுள்ள தனியார்ப் பள்ளிகளக்கு நிகரான கல்வித்தரம். ஆத்திக்குளத்தார் தலைமையில் எப்போதும் கட்டுப்பாடு அதிகம்.. ஆனால் அது ஒர் உறுத்தல் இல்லாத கட்டுப்பாடு.. ஆரம்பத்தில் ஆத்திக்குளத்தாரைக் கண்டாலே எனக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தது.. ஆனால் எனக்குத் தெரிந்தவரை அவர் எந்தக் குழந்தையையும் அடித்துப் பார்த்த நினைவில்லை.. கடிதோச்சி மெல்ல எறிவதை ஒரு கைவந்த கலையாகக் கொண்டிருந்தார்.. அடுத்த செக்ஷன் ஆசிரியர் ஒருவர் இருந்தார்.. அவருக்கு பையன்களை அச்சுறுத்துவதையே தொழிலாகக் கொண்டிருப்பார்.. அவர் அடிக்கடி கூறுவார் , ' ' டேய்.. அவன அந்தக் கரடி ரூம்ல போட்டுப் பூட்டுடா.. ' ', என்பார். நாங்கள் அனைவரும் அதைக் கேட்டு அரண்டு போவோம்..
அந்த மனிதர் அப்படிக்கூறக் காரணம் இருந்தது..இரண்டாம் வகுப்பு இருந்த அறையையொட்டிய ஒரு சிறிய இருட்டறை இருக்கும்..அதைக் காட்டித்தான் அந்த ஆசிரியர் அப்படிக் கூறிக் கொண்டிருந்தார்.. ஒருநாள் நாங்கள் ஆத்திக்குளத்தாரிடம் சென்று அவர் அப்படிக்கூறி அச்சுறுத்துத்துவதாகக் புகார் தெரிவித்தோம்.. சக ஆசிரியருக்காக ஆத்திக்குளத்தார் பரிந்து கூறவில்லை.. மாறாக அவரைக் கூப்பிட்டுக் கண்டித்தார்.. ' ' வளர்ற பசங்கக்கிட்ட அப்படிச் சொல்லி பயமுறுத்தாதிங்க.. நாமளே அப்படிச் செய்யறது மொறயில்லை.. ' ', என்றார். அந்த ஆசிரியர் முகத்தில் ஈயாடவில்லை.. அதிலிருந்து அவர் அப்படிக்கூறி அச்சுறுத்துவதைக் கைவிட்டுவிட்டாலும், எனக்கு என்னவோ அந்த அறை மீது ஒரு பயம் எப்போதும் இருக்கும்.. வளர்ந்த பையனாக ஆன பிறகும் அந்த அறைக்குச் செல்ல பயந்தேன்.. நண்பன் வாசுதான் சொல்லுவான், ' 'டேய்.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லடா.. அந்த ஆளு பொய் சொல்றாரு.. ' ', என்பான். இருந்தாலும் அவன் தைரியம் எனக்குக் கிடையாது.. கொம்புளதற்கே ஐந்து என்று இருக்கும் சமயத்தில்.. இதற்கு எத்தனையோ.. விலகியே நிற்பேன்..
வாசுகைப் பொறத்தவரை அவன் என்னுடைய ஞானகுரு. எனக்குக் கேரம் விளையாடக் கற்றுக் கொடுத்தது, பள்ளியின் எதிரில் மணிபர்சு வாய்க் கிழவி விற்கும் சுவையான அவித்த சக்கிரவள்ளிக் கிழங்கின் ருசியைச் சொல்லிக் கொடுத்தது, இரவுக் காட்சி ?ிந்தித் திரைப்படம் என்று - அந்த வயதில் என்னை மிரட்சியுற வைத்த காரியங்கள் அவை. வாசுவும் அவன் அண்ணனும் சிகரெட் பைத்தியங்கள். ஏழாம் வகுப்புப் படிக்கும் போதே சிகரெட் புரட்சி செய்தவன் வாசு. அண்ணன் பழைய கடைத்தெருவிலும், தம்பி வாசு புது பஸ் ஸ்டாண்டிலும் அக்னி வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.. நான் பலமுறைகள் வாசுவை எச்சரித்திருக்கிறேன்.. தாயில்லாப் பிள்ளைகள் என்று ஆத்திக்குளத்தார்ி செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டார் என்று ஊர்மக்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஆத்திக்குளத்தாரின் வீடு கிராமத்தின் எல்லையின் கடைசியில் இருந்தது. முன்பு அவர்ி கிராமத்தின் பிரதான தெருவான மேற்குக் குளக்கரைத் தெருவில் வசித்து வந்தார். மனைவி இறந்ததும், இந்த ஒதுக்குப்புரமான இடத்திற்கு வந்துவிட்டதாக வாசு கூறினான்.
இரண்டுபுரத்திலும் பச்சை வயல்கள் சூழ, நீண்டு வளர்ந்த கருப்புப் பாம்பைப் போல உள்ள பிரதான சாலையை விட்டுப் பிரிந்து செல்லும் மண் பாதை.. அதைத் தாண்டி வந்தால் சிறு வாய்க்கால்.. அதைத் தாண்ட ஒரு மரப்பாலம்.. அதையொட்டிச் செல்லும் ஒத்தையடிப்பாதை.. அதில் சென்றால், சுற்றிலும் மரஙக்ள் சூழ இருக்கும், ஆத்திக்குளத்தாரின் வீடு.. அழகான ஆஸ்ரமம் மாதிரி.. அவருக்குச் சுற்றிலும் வயல்கள், தோட்டங்கள் இருப்பதால், அதைப் பராமரிக்க வேண்டி இங்கு வந்து விட்டாதாகக் கூறினான், வாசு.. பக்கத்தில் அரசலாறு ஓடுகிறது.. என்னவொரு கோடையாக இருந்தாலும் என் வயதொத்த பையன்கள் லூட்டியடிக்க தேவையான தண்ணீீ ஒடிக் கொண்டிருக்கும்.. அருமையான நாட்கள்..
கும்பகோணம் வந்தவுடன் பேருந்து பிடித்து ஆத்திக்குளம் வந்துவிட்டோம்.. கோவிலுக்குச் சென்ற பின்பு நான் நேராக சன்னதித் தெருவில் இருக்கும் என் பள்ளிக்குச் சென்றேன்.. நம்பவேமுடியவில்லை.. இதுவா என் பள்ளி.. முழுவதும் புதிய கட்டிடமாக மாறிப் போயிருந்தது.. எல்லாம் புதிதுதான்.. ஆசிரியர்கள், மாணவாகளைப் போல.. ஏன் பாடங்களும்தான்.. பழைய ஆசிரியர்களைப் பற்றி விசாரித்தேன்.. இராசேந்திரன் பக்கத்து ஊருக்கு மாற்றலாகிவிட்டார்.. தருமராஜன் ஓய்வு பெற்று தஞ்கை சென்றுவிட்டார்.. இப்படி.. ஆத்திக்குளத்தாரும் ஓய்வு பெற்று இதே ஊரில்தான் இருக்கிறாராம்..
ஆனால் மீண்டும் பழைய இடமான மேற்குக் குளக்கரைத் தெருவிற்கு வந்துவிட்டராம்.. அவரிடம் முகவரியை வாங்கிக் கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றேன்.. அவரையும் பார்த்த மாதிரி இருக்கும், வாசுவைப் பார்த்த மாதிரியும் இருக்கும்..
மேற்குக் குளக்கரையில் இருந்த ஆத்திக்குளத்தாரின் வீடும் சற்று பெரிதாக இருந்தது.. பெரிய திண்ணை..ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. காத்திருக்கலாமா அல்லது சென்று விடலாமா என்று நாங்கள் தயங்கிக் கொண்டிருக்கும் போது, ஒருவர் அங்கு வந்தார்.. எங்களை கேள்விக் குறியுடன் நோக்கினார்..
'சார்.. நாங்க சென்னையிலிருந்து வர்றோம்.. ஆத்திக்குளம் சாம்பசிவம் சாரைப் பார்க்க வந்தோம்.. இது அவர் வீடுதானே.. '. என்று தயங்கியபடி கேட்டேன்..
'இது என் வீடு.. சாரு இங்கதான் தங்கியிருக்கார்.. திண்ணையில வுக்காருங்க.. வந்துடுவார்.. ', என்று கூறிவிட்டு வீட்டைத் திறந்து உள்ளே சென்றார்.. சிறிது நேரத்திற்குப் பின் மறுபடியும் வீட்டை பூட்டி விட்டு எங்கோ கிளம்ப ஆயத்தமானார்..எங்களைப் பார்த்து, ' உக்காருங்க.. வந்துடுவார்.. ' என்றபடி புன்னகைத்தார்.
எனக்குப் பெரும் குழப்பமாகயிருந்தது.. ' சார் எங்கப் போயிருக்கார்.. அவர் பையன் வாசுன்னு.. இ..இது.. சார் வீடு தான.. '. இழுத்தேன்..
'இல்ல சார்.. இது என் வீடு.. நானு இங்கதான் அவர தங்க வச்சுருக்கேன்.. ', என்றவரைப் புரியாமல் பார்த்தேன்..
என் முகத்தின் குழப்ப ரேகையைக் கண்ட அவர் விளக்கினார்.. 'அவரு ரெண்டு பசங்கள்ல பெரியவன் ரமேஷ் வடக்க பிசிினஸ் பண்றேன் பேர்வழின்னு பாதி சொத்த அழிச்சிட்டு எங்கயோ போய்விட்டான்.. இரண்டாவது பையன் வாசு, வெளி நாடு போகணும்னு சொல்லி மீதி சொத்த அழிச்சிட்டு இப்போ அமெரிக்காவிலோ எங்கயோ இருக்கான்..போனவங்க ரெண்டு பேரும் திரும்பியே பாக்கல..இவரு அந்தப் பசங்களுக்காக எகப்பட்டக் கடன வாங்கி வட்டியும் கட்டமுடியாம முதலும் கட்டமுடியாம சொத்த வித்து நட்டாத்தில தவிச்சாரு..சாப்பாடுக்கே கஷ்டம்.. நம்மவூர் வாத்தியார் ஆச்சேன்னு இங்க என்னோட தங்கிக்கச் சொன்னேன்.. நம்மவூட்டுல சாப்பிட சங்கடப்பட்டுட்டு, நெதம் திருக்குளத்துக்குப் போயி, எதாச்சும் பிராமணார்த்தம் கெடக்கிதான்னு பாத்துட்டு வருவாரு.. இதோ.. இங்கதான் தங்கியிருக்காரு.. ', என்று திண்ணையின் கடைக்கோடியில் இருந்த ஒரு தடுப்புச் சுவரைக் காட்டினார்..
விக்கித்து நின்றேன்..
அந்தத் தடுப்புச் சுவர் அருகே சென்று பார்த்தேன்.. நான்குக்கு ஐந்து என்றிருந்த எந்த ஜன்னலுமில்லாத டஞ்சன் இருட்டறை.. அருகே ஒரு டிரங்குப் பெட்டியும், பாத்திரமும் தட்டுப்பட்டது..
'அப்பா.. நீ சொல்லுவியே.. அந்தக் கரடி ரூம்.. இதுதானா.. ', பயந்தபடியே மகன் கேட்டான்..
'சேச்சே.. இதவிட அது பெருசா இருக்கும்டா.. ', என்றேன்.

-------------
(2001)