Saturday, November 1, 2008

வர்க்க பயம்

வர்க்க பயம்
நான் அன்று அலுவலகத்தில் 'டெய்லி சேல்ஸ் பிகர் ' சரியாகாமல் தவித்துக் கொண்டிருந்த போது, எனக்கு போன் வந்திருப்பதாக ராகவன் கூறினான்.
' 'டேய் பார்த்தா.. உனக்குத்தான்.. உன் மச்சான் ரகு பேசறான்.. ' ', என்று ரிசீவரைக் என்னிடம் கொடுத்தான்.
' 'ஹலோ .. யாரு அத்திம்பேரா.. நா ரகு பேசறேன்.. கொஞ்சம் அவசரமா ஆத்துக்கு வர்றேளா.. இங்க பெருங்களத்தூர்ல.. ' ', என்றான்.
எனக்குச் சட்டென்று புரியவில்லை.. இவன் எங்கே என் வீட்டுக்கு வந்திருக்கிறான்.. என்னை வேறு உடனே வரச் சொல்கிறான்..
' 'ஏன்டா.. யாருக்கு என்ன ஆச்சு.. ஏதாவது உடம்பு கிடம்பு.. ' ',
' 'அத்திம்பேர்.. இன்னிக்கி பத்து மணிக்கு ஆத்துக்குப் போலீஸ் வந்தாளாம்.. அக்காவ
கேட்டுண்டு வந்தாளாம்..ஸ்டேசனுக்கு வரச் சொன்னாளாம்.. ' ',
திடுக்கிட்டேன்..
' 'யார.. மைதிலியா.. நன்னா கேட்டியா.. ஏதோ தப்பிதமா இருக்கப் போறது.. ' ',எனக்கு ஜீவ்வென்று வந்தது..
' 'இல்ல அத்திம்பேர்.. நம்மாத்துக்கு வந்துதான் கேட்டா.. கரக்ட்டா சொன்னா.. ஏம்மா இங்க சர்க்குலேஷன் லைப்ரரி நடத்தற பொண்ணு வீடு இதானனு சரியா கேட்டாளாம்..அந்தப் போலீஸ்காரர் ஏதோ சீட்டு ஒண்ணு கொடுத்துட்டுப் போனார்.. அதில 'ஆய்வாளரை மாலையோ மதியமோ வந்து பார்க்கவும் 'ன்னு எழுதியிருக்கு.. ' ', என்றான் மூச்சுவிடாமல்..
எனக்கு மயக்கமே வந்தது.. ஓரே பரபரப்பாகயிருந்தது.. போலீஸ்..! அதுவும் என் மனைவியைத் தேடி.. சிரிப்பாகவும் இருந்தது.. அவள் என்ன ரெளடியா.. அல்லது ஏதாவது அரசியல் தொண்டனா.. அவளைத் தேடி.. நம்பவே முடியவில்லை.. ஏதோ கடுமையான குழப்பம் நேர்ந்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் என் மனைவியைத் தேடி..
ஒரு அப்பாவியைத் தேடி, உலகமே தெரியாதவளைத் தேடி.. சேச்சே..
அலுவலகத்தில் என் மாமனாருக்கு உடம்பு சரியில்லை என்று ஒரு பொய்யைக் கூறிவிட்டு (ஜாக்கிரதையாக), பர்மிஷன் கேட்டு வீட்டிற்கு விரைந்தேன்.
என்ன பிரச்சனையோ.. சரியாகத் தெரியவில்லை.. என் மனைவியிடம் ஒரு குணம் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் முதலில் தன் தம்பியிடம் கூறிவிடுவாள்..அவன் எதோ ஜார்ஜ் புஷ் என்ற நினைப்பு.. இப்போதும் அப்படியே அவனை முதலில் வரவழைத்துவிட்டாள்.
தாம்பரத்தில் இறங்கி என் சைக்கிளை எடுத்துக் கொண்டு அசுர மிதி மிதித்தேன்.. தடதடவென்று பரதநாட்டியம் குச்சிப்புடி ஆடியது நானா என் சைக்கிளா என்று தெரியவில்லை..
ரகு போன் செய்யும் போது கூறியதை நினைவுப் படுத்திப் பார்த்தேன்.. வீட்டுக்கு வந்த போலீஸ்காரர் 'சர்குலேஷன் லைப்ரரி ' நடத்தற பொண்ணு வீடு என்று என் வீட்டைக் கேட்டிருக்கிறார் என்றால், மைதிலி சர்குலேஷன் புக்ஸ் போடப் போனபோது எதாவது தவறு செய்து விட்டாளா.. ஏதாவது விபத்து கிபத்து என்று..ஒரு வேளை நீயூசென்ஸ் கேசு என்பார்களே.. சேச்சே.. என்ன எழவு இது.. யோசிக்கவே முடியவில்லை..
என் தாய் எத்தனையோ முறைகள் குறை சொல்லியும், நானும் என் மனைவியும் எங்கள் குடும்ப பட்ஜெட்டை உத்தேசித்து (தங்கச் சீட்டு கட்ட வேண்டும்) எங்கள் பகுதியில் ஒரு
சுழற்சிப் படிப்பகத்தை நடத்தி வருகிறோம்.. அவள் சைக்கிள் நன்றாக விடுவாள்.. கொலம்பஸ் ரேஞ்சில் அதை நான்தான் கண்டுபிடித்து இந்தத் தொழிலில் ஊக்கு வித்தேன்..
காலையில் சமையல் செய்து விட்டு புத்தகம் போடக் கிளம்பினாள் என்றால், ஒரு மூன்று அல்லது நான்கு மணிநேரம் ஏரியாவை ஒரு சுற்று சுற்றிவிட்டு மதியம் 1 மணி சுமாருக்கு
வீடு திரும்புவாள்.. தற்சமயம் கிட்டத்தட்ட ஒரு அறுபது வீடுகளில் சுழற்சி செய்கிறாள். அவ்விடம் சென்ற போது என்ன ஆயிற்றோ.. ஆண்டவா..
வீட்டு வாசலில் ரகு நின்று கொண்டிருந்தான்.. அவன் ஏதோ சொல்ல வந்ததைக் கூட சட்டை செய்யாமல் விருட்டென்று உள்ளே நுழைந்தேன். என் தாய் ஒரு மூலையிலும் என் மனைவி ஒரு மூலையிலும் தரையில் அமர்ந்திருந்தனர். என் மனைவி தன் இரு கன்னங்களில் கையை வைத்துக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அனைவரும் மெளனமாக இருந்தனர்.
' 'என்ன ஆச்சு.. ' ', என்றேன் பொறுமையிழந்து..
' ' என்ன ஆறத்துக்கு.. நா தலப்பாடா அடிச்சிண்டேன்.. என்ன பெரிய பிசினஸ் பண்றேள் கொள்ளப் போறது.. இப்போ ஆத்து வாசல்ல போலீஸ் நிக்கறான்.. ' ', என்றார் என் தாய்.
' 'ரகு நீயாவது சொல்லு.. ' ',
' 'அதான் அத்திம்பேர்.. காத்தால பத்து மணிக்கு ஒரு ஆட்டோல ஒரு போலீஸ்காரர் வந்தார்.. சர்க்குலேஷன் நடத்தற பொண்ணு வீடு இதானான்னு கேட்டார்.. ஆமான்னு அம்மா சொன்னாளாம்.. உடனே எஸ்.ஐ அய்யா வரச்சொன்னார்ன்னு இந்தச் சீட்டக்
கொடுத்தாராம்.. ஏதோ கேஸ் இருக்காம்.. ' ',
நான் முடிவெடுத்தேன்.. இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை.. பேசாமல் ஒரு வக்கீலைப் பார்த்து யோசனை கேட்பதுதான் சரி என்று தோன்றியது. தேவையற்ற பிரச்சனையை என் குடும்பத்தினரே கிளப்பிவிடுவார்கள்.. என்ன கேஸ் எதற்கு வரவேண்டும் என்று அந்தப் போலீஸிடம் கேட்க பயந்து அவர் சொன்னதற்குத் தலையாட்டும் கூட்டத்தினரிடம் போய் என்ன விவாதிப்பது..
எங்கள் பகுதியில் வக்கீல் ராமராவ் எனக்குப் பழக்கம். அவரும் எங்கள் சர்க்குலேஷன் உறுப்பினர்.. அவரிடம் சென்றேன்..
' ',இதப் பாருங்க பார்த்த சாரதி, இது அனாவசிய மிடில் கிளாஸ் பயம்.. எஸ்ஐ இன்னிக்கிகா வரச்சொன்னார்.. போக வேண்டாம்.. சாயங்காலமா, நீங்க மட்டும் ஒங்க ஒய்ப் வேண்டாம்.. போய்ப் பார்த்துட்டு என்ன விஷயம்னு கேளுங்க.. ரொம்ப ஏடாகூடமா இருந்தா, நா வர்றேன்.. அப்பறம் மூவ் பண்ணலாம்.. ' ', என்றார்.
அவர் சொன்னதைப் போல செய்வது என்று முடிவுவெடுத்து, அந்தக் காவல் நிலையத்தை அன்று மாலை அடைந்தேன்..
நான் அந்தக் காவல் நிலையத்திற்குச் சென்ற போது அங்கு ஒருவரும் இல்லை.. வெறிச்சென்று இருந்தது.. ஒரு மூலையில் மேஜை நாற்காலிகள் போடப் பட்டிருந்தது.. மேலே ஒரு மின் விசிறி (ஹைதர் காலத்து) அனாமத்தாகச் சுற்றிக் கொண்டிருந்தது.. நான் உள்ளே சென்று பார்த்தேன்.. பெஞ்சில் ஒரு காவலர் மேல் சட்டையை கழற்றி விட்டு தன் தொந்திக்கு மின் விசிறிக் காற்று வருவதற்கு தோதாகப் படுத்துக் கொண்டிருந்தார்.. என்னைப் பார்த்ததும் மெதுவாக எழுந்து கொண்டார்..
' 'யாரு..என்ன மேட்டருங்க.. ' ', என்றார் கொட்டாவிவிட்டுக் கொண்டே...
முதன் முதலில் காவல் நிலையம் செல்கிறேன்.. அப்பப்பா.. இதுவரையில் திரைப்படத்தில் பார்த்துத்தான் பழக்கம்.. என் மனைவியில் தயவில் நானே செல்ல வேண்டியிருக்கிறது.. ஆண்டவா.. என்ன ஒரு படபடப்பு இதுவரை நான் அனுபவித்தே இருக்காத ஒரு பயங்கலந்த மயக்கம்.. நான் சின்ன வயதில் செய்த சின்னஞ்சிறு தவறுகள் நினைவுக்கு வந்தது.. ஓரத்தில் துப்பாக்கி.. அடி வயிற்றில் பந்தாக சுழல்வதைப் போலிருந்தது..
ஒரு வழியாக பயம் நீங்க அனுமாரை தியானம் செய்து கொண்டு ' 'எஸ்ஐய பாக்கணும்.. ' ', என்றேன்..
' 'அய்யா அஞ்சு மணிக்கு வருவாரு.. அப்படி ஒக்காருங்க.. டா வாங்கி வரச் சொல்றேன் .. ' ', என்றார்.. பரவாயில்லை.. தன்மையாக பேசுகிறாரே..
ஒரு வேளை இவருக்கு 'நம் கேசை 'ப் பற்றித் தெரிந்ததால், மரியாதை தருகிறாரா..
அப்போது ஒன்றும் பிரச்சனையில்லை போலிருக்கிறதே என்று நினைத்த என் நினைப்பு பத்து நிமிடம்கூட நீடிக்க வில்லை.. இந்த மனிதருக்கு ஒரு எழுவும் தெரியவில்லை என்பது அவர் பேச்சின் ஊடே தெரிந்தது.. அடச்சே எனக்கு சுவாரஸ்யமே குறைந்து விட்டது.. இந்த மனிதரோ என்னை ஒரு மணிநேரம் 'ரம்பம் ' போட்டுக் கொண்டிருந்தார்.. எந்த போலீஸ் தண்ணி போடுவார்.. எவர் போடமாட்டார் என்பது எனக்கு முக்கியமா.. உலகத்திலயே தண்ணி போடாத போலீஸ் இவர்தானாம்.. பெருமையாகச் சொல்லிக் கொண்டார்..
ஐந்து மணிக்கு மேல் அந்த ஆய்வாளர் ஜீப்பில் வந்தார்.. நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்.. நாங்கள் அங்கே இருப்பதைச் சட்டை செய்யாமலே அவர் பாட்டுக்கு உள்ளே சென்றார்..
அந்தக் காவலர் என்னை ஆய்வாளரிடம் அறிமுகப் படுத்த, எஸ்ஐ அலட்சியமாக என்னைப்
பார்த்தார். அவர் பார்வை ஒன்றே போதும், நான் தெருவில் கிடக்கும் ஒரு ஜந்து -
அதைக் காலால்கூடத் தொட முடியாது என்ற பாவனை.. ஒரு வேளை இதுவும் அவர்கள்
ட்ரைனிங்கில் கற்றுக் கொடுப்பார்கள் போலும் என்று நினைத்தேன்.
' 'என்ன கேசு.. ' ', என்றார் ஆயாசத்துடன்.
' 'சார் நா திருமலைநகரிலிருந்து வர்றேன்.. காலையில ஒரு பி.சி வந்து என் மனைவிய ஸ்டேசனுக்கு வரச் சொன்னதா சொன்னாரு.. ' ', என்று இழுத்தேன்.
' 'ஓ.. அந்த லைப்ரரி கேசா.. எங்க அந்தப் பொண்ணு.. ' ',
' 'அவள அழச்சிண்டு வரல.. நா வந்துருக்கேன்..என்ன கேசுன்னு சொன்னா..கேட்டுண்டு
போகலாம்னு.. நா அவ ஹஸ்பெண்டுதான்.. ' ',
' 'நீ வந்து என்ன பண்ண.. அந்தப் பொண்ண அளச்சிட்டு வாங்க..என்கொயரிக்கு.. ' ',
' 'என்ன கேசுன்னு சொன்னா.. ' ',
' 'யோவ் என்ன கேசுன்னு சொன்னாத்தான் கூட்டிட்டு வருவியா.. சொல்ல முடியாதுய்யா.. தொலச்சுருவேன்.. யார்ட்ட பேசிட்டு இருக்க.. நாளைக்கி காலையில அந்தப் பொண்ணு இங்க நிக்கணும்.. அப்படியில்லைன்னா ரெண்டு பேத்தையும் சஸ்பெக்ட்டுன்னு உள்ள போட்ருவேன்.. ' ', உருமினார்.
நான் உறைந்து போனேன்.. இதென்ன விபரீதம்.. இத்தனை கடுமையாக என் வாழ்க்கையில் அன்று மட்டுமே அனுபவித்திருக்கிறேன்.. தலை சுற்றி 'கிர் 'ரென்று விழுந்துவிடுவேன் போலிருந்தது.. சற்று சுதாரித்துக் கொண்டு அவரிடம் மேலும் பேசுவதற்குள், ஜீப்பில் எங்கோ மறைந்துவிட்டார்..
யாரோ அழைத்தார்கள்.. அந்தக் காவலர்தான்.. ' 'சார்..காலையில ஒங்க வூட்டுக்கு
வந்தது முனசாமி அண்ணன்தான்.. ' ', என்று இன்னொரு காவலரைக் காட்டினார்.. நான்
அவரை அணுகினேன்.
' 'ஆமாங்க.. நான்தான் வந்தேன்.. யாரு அந்தப் பொண்ணு.. ஒங்க ஒய்பா.. அது வேற ஒண்ணையும் இல்லை சார்.. சதாசிவம் தெருவில ஒரு மர்டர் அட்டெம்ட் நடந்திருக்கு.. ' ', என்று தொடங்கினார்.
திடுக்கிட்டேன்.. நான் அவரை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்குச் சென்றேன்..
அவர் கூறியதைக் கேட்டு பயம் இரட்டிப்பாகியது..
சதாசிவம் தெருவில் ஒரு வயதான தம்பதியினர் வசிக்கின்றனர். அவரும் எங்கள் சுழற்சிப் படிப்பக உறுப்பினர். இரண்டு நாட்களுக்கு முன்பு யாரோ காலையில் அந்த வீட்டுக் காரரை நன்றாக நையப் புடைத்துச் சென்றுவிட்டார்களாம்.. குற்றுயிராக அந்த மனிதர் இப்போது மருத்துவமனையில்.. நினைவு திரும்பவில்லை.. வீட்டுக்காரரின் மனைவி எங்கோ ஊருக்குச் சென்று இருக்கிறாராம்.. அப்போதுதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது..
போலீஸ் விசாரணையில் எதிர் வரிசை டாக்கடைக்காரர், தான் காலையில் யாரையும் பார்க்கவில்லை என்றும், காலை 9 மணி அளவில் அந்த வீட்டிற்குப் புத்தகம் போடும் ஒரு பெண்ணைப் பார்த்ததாகவும் கூறவே, போலீசில் என் மனைவியை வரச் சொல்லியிருக்கிறார்கள். அனைத்தையும் கூறிவிட்டு அந்தப் போலீஸ்காரர் ஒரு அம்பது
கேட்டார்.. கையில் இருந்ததைக் கொடுத்தேன்.. எனக்கு உடம்பில் ஸ்மரணையே இல்லை..
அட கடவுளே.. இது என்ன கொடுமை.. அடுத்து என்ன ஆகுமோ.. இதுவரை எவரும் பிடி
படவில்லை என்றால் என் மனைவியைக் கைது செய்துவிடுவார்களோ.. அய்யோ.. என்னால்
நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.. அவள் இதைக் கேட்டாலே, பிராணனை விட்டுவிடுவாளே.. ஆண்டவா.. கைவிட்டுவிடாதே..
உடனே ராமராவ் வீட்டிற்கு விரைந்தேன். என் கஷ்டகாலம் அவர் ஊருக்குப் போய் இருக்கிறாராம்.. வர இரண்டு நாட்கள் ஆகுமாம்.. செத்தேன் என்ற நினைத்துக் கொண்டேன்.. இனி யார் எனக்கு உதவப் போகிறார்கள்.. ஆனாது ஆகட்டும்.. என்ன நடக்க வேண்டுமோ நடந்து தொலையட்டும்.. என் கையை மீறி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.. என்ன செய்ய முடியும்.. அழுகை பீறிட்டு வந்தது.. அடக்கிக் கொண்டேன். யாராவது ரோட்டில் பார்த்தால் சிரிப்பார்கள்.. அரஸ்ட் ஆகிவிடுவாளோ.. ஒருவேளை அந்த எஸ்ஐ கைது வாரண்ட் வாங்கத்தான் சென்றிருக்கிறாரோ.. தீடிரென்று இந்தக் கேசில் திருப்புமுனையாக மைதிலியைக் கைது செய்ய கோர்ட்டார் உத்தரவு வந்துவிடுமோ.. எப்படி வரும்.. அய்யோ.. என்னால் எதையும் நினைக்க முடியவில்லையே..
வீட்டில் அனைவரும் சூழ்ந்து கொண்டு கேள்விமேல் கேள்வி கேட்டார்கள்.. என் தாய் தங்கை, மனைவி என்ன கேட்கிறார்கள் என்பதே புரியவில்லை.. என் பேயறைந்த முகத்தைப் பார்த்து மாமனார் கேட்டார், ' ' என்ன சொல்றார் இன்ஸ்பெக்டர்.. ' ', என்றார் முகத்தில் ஆயிரம் டன் விசனம்..
' 'அம்மா.. விஷயம் விபரீதமா போய்டுத்தும்மா.. ' ', என்று மட்டும்தான் சொன்னேன்.
ஒரு வழியாக ஆசுவாசப் படுத்திக் கொண்டு அனைத்தையும் சொல்லி முடித்தேன்.. மைதிலி அந்தச் செட்டியார் வீட்டுக்குச் சென்றது.. அதை ஒரு டாக்கடைக்காரன் பார்த்தது.. அதை அவன் போலீசில் தெரிவித்தது என்று தொடர்ந்த அந்த பயங்கரத்தை முடித்தேன்..
' 'அய்யோ.. நா அவாத்துக்கு புக்ஸ் போடப் போனது நிஜம்.. ஆனா காலிங் பெல்
அடிச்சும் யாரும் வரல.. அதனால திரும்பிட்டேன்.. உள்ளயே போகலயே.. ' ', என்றாள் கண்களில் பயத்துடன்..
' 'அய்யய்யோ.. மன்னி நீங்க அந்தக் கேட்டத் தொட்டேளா.. அதில ஒங்க கைரேகை
பதிஞ்சு இருக்கும்.. ' ', என்று என் தங்கை போதாத குறைக்கு அவள் பங்கிற்குச் சொல்லி வைக்க, அனைவரையும் ஒருவித பீதி கவ்வியது..
அதன் விளைவாக, பொத்தென்று ஒரு சத்தம் கேட்டது.. என் மனைவிதான் மயங்கி விழுந்தாள்..
நான் அந்த மருத்துவமனையில் அவளைச் சேர்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது..
அதற்குள் என்னென்னவோ நடந்து விட்டது.. குற்றுயிராகக் கிடந்த அந்தச் செட்டியார் பிழைத்துவிட்டார்.. அவரே நடந்ததைக் கூறினாராம்..
அவர் சொந்தக் காரர் பையன்கள் அவர்கள் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனராம்..
ஏதோ சொத்து விஷயமாக காரசாரமாக விவாதம் நடந்து வந்ததாம்.. இரவு முழுவதும்
பேசியும் எந்த உடன்பாடு எட்டப்படாததால் உச்சகட்டமாக வாய்த் தகராறு முற்றி இவரை அடித்துப் போட்டு, நகைகளை எடுத்துச் சென்றுவிட்டனராம்.. இவற்றை என்னிடம் கூறிவிட்டு அந்தக் காலவர் என்னிடத்தில் ஒரு 'ஸ்டேட்மெண்ட் ' வாங்கிக் கொண்டு சென்றார்.
அன்று என் மனைவி கண் விழித்த போது நடந்தவற்றைக் கூறி அவளைத் தேற்றினேன்.
' 'போறும் மைதிலி.. இனிமே இந்தப் பிசினஸே நமக்கு வேண்டாம்.. நிறுத்திடலாம்.. தலைக்கு வந்தது தலப் பாகையோட போச்சும்பாளே.. அதப் போல.. ' ', என்றேன்.
அதற்கு என் மனைவி அந்த நிலையிலும் ஈனஸ்வரத்தில், ' ' என்னத்து நிறுத்தணும்.. ஏதாவது ஒரு பையன வச்சுண்டு போடுவோம்.. மாட்டிண்டா அந்தப் பையன்தான மாட்டிப்பன்.. ' ', என்றாள் மிகச் சாதாரணமாக..
(1997)

1 comment:

கோவி.கண்ணன் said...

கடைசி வரை சஸ்பென்ஸ் கொண்டு சென்று அசத்தி இருக்கிறீர்கள் !